உட்லண்ட்சில் நவம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் நடந்த சண்டையைத் தொடர்ந்து, மேலும் இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மற்றோர் ஆடவர் கைதானார்.
அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு வயது 17 மற்றும் 25. சண்டையிட்டதற்காகவும் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் அவர்கள் கைதானதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) கூறியது.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13, புளோக் 182Aல் நடந்த சண்டை குறித்து நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு 12.55 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது 42 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததற்காக அவர் பின்னர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 11ஆம் தேதியன்று சிறு காயங்களுக்காக மாது ஒருவர் சோதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார்.
சண்டையில் ஈடுபட்ட மற்றவர்களைத் தேடிவருவதாக காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.