‘உட்லண்ட்ஸ் ஹெல்த்’ என்ற பொது மருத்துவமனை அதன் பெயரை உட்லண்ட்ஸ் மருத்துவமனை என்று அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளது. ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து அந்த மாற்றம் நடப்புக்குவருகிறது.
என்ஹெச்ஜி ஹெல்த் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், அனைத்து மருத்துவக் கழகங்களின் பெயர்களை ஒன்றாக்க முயல்வதை முன்னிட்டு உட்லண்ட்ஸ் ஹெல்த் என்ற பெயர் மாற்றப்பட்டது.
பெயர் மாற்றத்தைத் தவிர, மருத்துவமனை அமைந்திருக்கும் இடத்திலோ அதன் சேவைகள், செயல்பாட்டிலோ எந்த மாற்றமும் இருக்காது என்று உட்லண்ட்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
2024ஆம் ஆண்டு திறக்கப்பட்ட உட்லண்ட்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையின் சுமையை வெகுவாகக் குறைத்தது.
2010ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ளோருக்குச் சேவை வழங்கி வந்த ஒரே ஒரு மருத்துவமனை கூ டெக் புவாட் மருத்துவமனை.
சிங்கப்பூரில் முதல்முறையாகச் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தும் பேட்டையாக உட்லண்ட்ஸ் வட்டாரம் உருமாறவிருக்கிறது. ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டத்தில் உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகளுக்கு ஏற்ற சுகாதாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹெல்தியர் எஸ்ஜி தடுப்பு சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் தேசியத் திட்டம்.

