புதிதாகத் திறக்கப்பட்ட உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகம் அருகில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனைமீதுள்ள சுமையைத் தளர்த்தியுள்ளதாகவும் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) கூறியுள்ளார்.
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் பேசிய திரு ஓங், ஈசூனில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையின் நிலவரம் குறித்து நீண்டகாலமாக அரசாங்கம் கவலைப்பட்டதாகக் கூறினார்.
2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கூ டெக் புவாட் மருத்துவமனை சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் சேவை வழங்கிய ஒரே மருத்துவமனையாக இருந்தது.
“மருத்துவமனையின் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூடுதல் நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையால் நிலைமை மேம்பட்டுள்ளது,” என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை செயல்படத் தொடங்கியதை அடுத்து கூ டெக் புவாட் மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்திருப்பதைச் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.
கூ டெக் புவாட் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் கடந்த ஆண்டு 100 விழுக்காடு நிரம்பிவிட்டன. இவ்வாண்டு ஜூலை மாத நிலவரப்படி 80 விழுக்காட்டுப் படுக்கைகள் மட்டுமே நிரம்பின.
7.7 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் 9வது பொது மருத்துவமனையான உட்லண்ட்ஸ் ஹெல்த் தேசிய அளவிலான சுகாதார உள்கட்டமைப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
“உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை பலவகைகளில் எதிர்கால மருத்துவமனைகளின் தரத்தை நிர்ணயிக்கிறது,” என்று திரு ஓங் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
உட்லண்ட்ஸ் ஹெல்த் அதன் மருத்துவ நிலையத்தை 2023 டிசம்பரில் தொடங்கியது. அதன் தீவிர சிகிச்சைப் பிரிவும் அவசரச் சேவைப் பிரிவும் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கின.
மருத்துவமனையில் மொத்தம் 1,000 படுக்கை வசதி உள்ளது. அவற்றுள் 600க்கும் அதிகமானவை தற்போது பயன்பாட்டில் உள்ளன.
ஆகஸ்ட் 2ஆம் தேதி நீரிழிவால் பாதத்தில் காயமுள்ள நோயாளிகள் முன்கூட்டியே சிகிச்சை பெற புதிய காயம், ரத்தக் குழாய் நிலையத்தை உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.