வேலை, கல்வித் தேவைகளை இன்னும் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கலாம்: கோ போ கூன்

வேலை, கல்வித் தேவைகளை இன்னும் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கலாம்: கோ போ கூன்

2 mins read
cc31fbb6-a794-433c-b87d-6e760e4bc8bc
கலாசார, சமூக, இளையர் துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவும் மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூனும் கிராப்அக்காடெமி பிப்ரவரி 5ஆம் தேதி நடத்திய ஏஐ திறன்மேம்பாட்டுப் பயிலரங்கில் பங்கேற்றோருடன் கலந்துரையாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையிடங்களும் பள்ளிகளும் ஒன்று மற்றதன் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும் வழிவகைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

மனிதவள, சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன், கிராப் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 5) சென்றபோது அதனைத் தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் என்னவெல்லாம் முடியுமோ அவற்றைப் படித்தோம். என்னவெல்லாம் இயலுமோ அவற்றைக் கற்றோம். பட்டம் பெற்று, வேலைக்குச் சென்றோம். ஆனால் அது இப்போது மாறப்போகிறது. வேலைக்கும் படிப்புக்கும் மேலும் தொடர்பு இருக்கும் விதத்தில் அது உருமாறும்,” என்றார் அவர்.

“சில பழைய முன்மாதிரிகளைப் புதிய பொருளியலின் புதுத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்,” என்று டாக்டர் கோ கூறினார்.

மனிதவள மூலதனம் தொடர்பான பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுவின் ஒரு பகுதியாக நிறுவனத்திற்கு அவரும் கலாசார, சமூக, இளையர் துறைத் தற்காலிக அமைச்சரும் கல்வி மூத்த துணையமைச்சருமான திரு டேவிட் நியோவும் சென்றிருந்தனர். குழுவின் பரிந்துரைகள், திட்டங்கள் பற்றி நிறுவனங்கள் என்ன நினைக்கின்றன என்பதைக் கேட்டறிய அவர்கள் அங்குப் போயிருந்தனர்.

சிங்கப்பூர் ஊழியர்களிடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. மாறிவரும் பொருளியலில் ஊழியர்கள் போட்டித்தன்மையுடன் திகழ அது உதவும் என்று குழு நம்புகிறது.

தொழில்நுட்பமும் ஏஐயும் வர்த்தக நடவடிக்கைகளில் முன்பைவிட வேகமான மாற்றங்களை உருவாக்கி வருவதாக டாக்டர் கோ குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய உடனடி இடையூறுகளைச் சமாளிக்க ஊழியரணி தயாராக இருக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படைப் புரிதலை மேம்படுத்தும் வழிகளைக் குழு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்