இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: தினேஷ் வாசு தாஸ்

இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: தினேஷ் வாசு தாஸ்

2 mins read
b34b2026-de76-479e-be95-0530d81ec1f0
மக்கள் செயல் கட்சி வேட்பாளர் தினேஷ் வாசு தாஸ், 50. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்குள்ளேயே ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரான தினேஷ் வாசு தாஸ், 50, தெரிவித்துள்ளார்.

மொழி, பிறப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் தொடர்பில் பணியாற்ற வேண்டியுள்ளது என்கிறார் திரு தினேஷ்.

“உள்ளூர் இந்தியரா வெளிநாட்டில் பிறந்த இந்தியரா என்பது ஒரு பொருட்டன்று.

“ஒருவர் சிங்கப்பூரர் எனில், அவர் தென்னிந்தியர், வடஇந்தியர், அல்லது எத்தகைய இந்தியராக இருப்பினும் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், நாம் அனைவரும் ஒன்றுதான். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று திரு தினேஷ் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் ஆயுதப்படையில் 23 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள திரு தினேஷ், பிரிகேடியர் ஜெனரலாக உயர்ந்தவர். கடந்த 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான உச்சநிலைச் சந்திப்பின்போதும் இவர் முக்கியப் பணியாற்றினார்.

பின்னர் சுகாதார அமைச்சில் இணைந்து, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தொற்றுப் பரிசோதனை முதல் தடுப்பூசி இயக்கம் வரையிலான பல நிலைகளிலும் இவரது பெரும்பங்களிப்பு இருந்தது.

இப்போது, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின்பேரில் அரசியலில் கால்பதித்துள்ள இவர், மசெக அறிவித்துள்ள 32 புதுமுக வேட்பாளர்களில் ஒருவர்.

இவ்வாண்டு மார்ச் 28ஆம் தேதி ‘ஏஐசி’ எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாகிப் பதவியிலிருந்து இவர் விலகினார்.

அதன்பின் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி சமூக நிகழ்வுகளில் இவரைக் காண முடிந்தாலும் எந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆயினும், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறுபான்மையினர் சார்ந்த அம்சங்களுக்காக முன்னிற்பார் என்பது உறுதி.

“நான் தமிழ் பேசுபவன். தமிழர்கள், இந்தியர்கள் என்றில்லை, சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மையினர் அனைவரது மனப்போக்கையும் அறிவேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திலும் (சிண்டா) இந்து அறக்கட்டளை வாரியத்திலும் இவர் சில பணிகளை ஆற்றியுள்ளார்.

சமூகத்தை முன்னேற்ற இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்கிறார் திரு தினேஷ்.

“இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல், கவனக்குறைவாகவோ தற்செயலாகவோ மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் பின்தங்கிவிடக்கூடும். அது யாருக்கும் நல்லதன்று,” என்று இவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்