வேலை அனுபவப் பயிற்சி, மாணவர் பரிமாற்றத் திட்டம்: ஆசியான், சீனா, இந்தியாவை நாடும் உள்ளூர் மாணவர்கள்

வேலை அனுபவப் பயிற்சி, மாணவர் பரிமாற்றத் திட்டம்: ஆசியான், சீனா, இந்தியாவை நாடும் உள்ளூர் மாணவர்கள்

2 mins read
f34151a0-484f-4615-8f0b-a58562bd5608
தாய்லாந்தின் ‘இன்ஃபுளூவென்சர்’ முகவை ஒன்றில் பணிபுரிந்த 20 வயது எபி லீ, அங்கு மேற்பார்வையாளர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் தமது தொழில்முறைக் கட்டமைப்பை வளர்த்துக்கொண்டதாகக் கூறினார். - படம்: எபி லீ

செப்டம்பர் 2025ல், மக்கள் தகவல் தொடர்பியல் மாணவியான எபி லீ, தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஐந்து மாத வேலை அனுபவப் பயிற்சியைத் தொடங்கினார். இது அவரது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நீங்காப் பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.

தாய்லாந்தின் ‘இன்ஃபுளூவென்சர்’ முகவை ஒன்றில் பணிபுரிந்த 20 வயது குமாரி லீ, அங்கு மேற்பார்வையாளர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் தமது தொழில்முறைக் கட்டமைப்பை வளர்த்துக்கொண்டதாகக் கூறினார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உலகளாவிய தொழில்முனைவு வேலை அனுபவத் திட்டத்தின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்ற குமாரி லீ, இப்போது பல்கலைக்கழகப் படிப்பிற்குத் தயாராகி வரும் நிலையில், ஐரோப்பாவின் மீது தமது பார்வையைத் திருப்பியுள்ளார்.

“தென்கிழக்கு ஆசியாவின் கலாசாரங்களிலிருந்து ஐரோப்பாவின் கலாசாரம் வேறுபட்டது, எனவே, எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக அங்கு செல்வேன்” என்று மூன்றாம் ஆண்டு மாணவியான குமாரி லீ கூறினார்.

ஆங்கிலம் பேசும் நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகள் போன்ற பல்லாண்டு காலமாகப் பிரபலமாக இருந்து வரும் இடங்களுடன், ஆசியான்-சீனா-இந்தியா ஆகியவற்றிலும் வாய்ப்புகளைத் தேடும் உயர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், வேலை அனுபவப் பயிற்சிகள், சமூக சேவைப் பயணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

2028ஆம் ஆண்டிற்குள் அனைத்து உயர்கல்வி மாணவர்களில் 70 விழுக்காட்டினர் வெளிநாட்டு அனுபவத்தைப் பெற வேண்டும் என்றும் இந்த வாய்ப்புகளில் 70 விழுக்காடுஆசியான்-சீனா-இந்தியா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் 2020ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு தனது இலக்கை அறிவித்தது.

சில பல்கலைக்கழகங்கள் சீனா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளை முன்னணி இலக்குகளாகக் கொண்டுள்ளன. அதே வேளையில், ஆசிய நாடுகளுக்கான மாணவர் பயணங்கள் அதிகரித்துள்ளதாகப் பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் பலர் இரண்டு முதல் மூன்று வெளிநாட்டுப் பயணங்களில் இணைவதாகச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“ஐரோப்பா நீண்டகாலமாக விருப்பமான தெரிவாக இருந்து வந்தாலும் அண்மைய ஆண்டுகளில் வட ஆசியா மற்றும் ஆசியான் நாடுகள் மீது வலுவான மற்றும் வளர்ந்து வரும் ஆர்வத்தை நாங்கள் கண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டிலிருந்து, வெளிநாட்டு அனுபவம் என்பது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிப்பதற்கான ஒரு தேவையாக இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்