தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் இனி சிங்கப்பூரில் அதிக காலம் பணியாற்றலாம்

3 mins read
44e26cbf-3b0f-4bc2-b0d8-9b032c602ba4
இந்தியா, பங்ளாதே‌ஷ் போன்ற நாடுகளைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான அதிகபட்ச பணிக்காலம் சார்ந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி அதிகக் காலம் இங்கு வேலை செய்யலாம்.

இந்தியா, பங்ளாதே‌ஷ், இலங்கை, தாய்லாந்து, சீனா, பிலிப்பின்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள், அவரவர் திறன், துறைக்கு ஏற்றாற்போல் தற்போது 14 முதல் 26 ஆண்டுகள்வரை மட்டும்தான் இங்கு வேலை செய்ய அனுமதிப்படுகின்றனர்.

அந்தக் கட்டுப்பாடு வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நீக்கப்படும்.

அனுபவமிக்க ஊழியர்களை நிறுவனங்கள் கூடுதல் ஆண்டுகாலம் வைத்திருக்க இப்புதிய நடைமுறை வழிவகுக்கும்.

ஆனால், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு இம்மாற்றம் பொருந்தாது.

வயது வரம்பு அதிகரிப்பு

வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போருக்கான வயது வரம்பை மனிதவள அமைச்சு உயர்த்துகிறது. அது 60லிருந்து உள்ளூர் ஓய்வுபெறும் வயதான 63க்கு அதிகரிக்கப்படும்.

இப்போதைக்கு, புதிய வேலை அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மலேசியர்களுக்கு 58 வயது; மலேசியர் அல்லாதவருக்கு 50 வயது. வரும் ஜூலை 1 முதல், புதிய வேலை அனுமதிச்சீட்டுக்கு அனைவரும் 61 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் ஒதுக்கீடுகள்

சிங்கப்பூரின் உத்திபூர்வ பொருளியல் முன்னுரிமைகளுக்குப் பங்களிக்கும் நிறுவனங்களை ஆதரிக்க கூடுதல் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திபூர்வப் பொருளியல் முன்னுரிமைகளுக்கான மனிதவளத் திட்டம் (M-SEP) வழி, தற்போது நிறுவனங்கள் ஈராண்டுகளுக்கு அதிக எஸ்-பாஸ், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களைப் பணியமர்த்தலாம்.

இனி இந்த ஆதரவுக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

மேலும், வெளிநாடுகளுக்கும் தலைமைத்துவத் திட்டங்களுக்கும் தங்கள் உள்ளூர் ஊழியர்களை அனுப்ப உறுதியளிக்கும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்வழி தற்காலிகமாகக் கூடுதல் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு வழங்கப்படும்.

கூடுதல் தகுதிபெறும் திட்டங்களை உள்ளடக்கும் விதத்தில் இத்திட்டம் விரிவாக்கப்படும்.

மேலும் சில நாடுகள் சேர்ப்பு

வேலை அனுமதிச்சீட்டுக் கட்டமைப்பின்வழி கூடுதல் திறனாளர்களைப் பணியமர்த்த உதவும் வகையில், ஊழியர்களுக்கான நாடுகளின் பட்டியல் (Non-Traditional Sources List) 2025 ஜூன் 1 முதல், பூட்டான், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்படும்.

2025 செப்டம்பர் 1 முதல் சமையற்காரர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், உற்பத்தித்துறை பொறி ஊழியர்கள் (manufacturing operator) ஆகிய துறையினரையும் மனிதவள அமைச்சு இப்பட்டியலில் சேர்க்கும்.

எஸ்-பாஸ் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

எஸ்-பாஸ் அனுமதி அட்டைக்குத் தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் $3,150லிருந்து $3,300க்கு அதிகரிக்கப்படும்.

வயதுக்கேற்ப இந்தக் குறைந்தபட்ச ஊதியம் படிப்படியாக உயர்த்தப்படும்.

45 வயதுக்கு மேற்பட்டோர் எஸ்-பாஸ் அட்டைக்குத் தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் $4,650லிருந்து $4,800ஆக உயர்த்தப்படும்.

நிதிச் சேவைகள் துறையில் எஸ்-பாஸ் அட்டைக்குத் தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் $3,650லிருந்து $3,800க்கு அதிகரிக்கப்படும். இதுவும் வயதுக்கேற்ப உயரும்.

இந்த புதிய வரம்புகள், 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செய்யப்படும் புதிய எஸ்-பாஸ் விண்ணப்பங்களுக்கும், 2026 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலாவதியாகும் எஸ்-பாஸ் புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

எஸ்-பாஸ் அனுமதி அட்டைக்கான ஒன்றாம் படிநிலைத் தீர்வையும் (Tier 1 Levy) 2025 செப்டம்பர் 1 முதல் $550லிருந்து $650ஆக அதிகரிக்கும்.

வேலை அனுமதி அட்டைக்குத் (EP) தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியத்தில் இவ்வாண்டு எந்த மாற்றமும் இருக்காது.

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் ஏற்கெனவே வேலை அனுமதி அட்டைக்குத் தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் $5,000லிருந்து $5,600க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்