வேலை அனுமதி அட்டை விதிமீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் ஏறத்தாழ 45 நிறுவனங்களிடம் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்தது, வெளிநாட்டு ஊழியர்களைச் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியது ஆகியவை அந்த விதிமீறல்களில் அடங்கும்.
விமான நிலையத்தில் முன்களச் சேவை வழங்கும் ‘சாட்ஸ்’ நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 270 ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமையன்று (நவம்பர் 2) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அனுமதி அட்டை விதிமுறைகளுக்கு உட்படாமல் அவர்கள் பணியமர்த்தப்பட்ட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ‘இ-பாஸ்’ அட்டை வைத்துள்ளவர்கள் விமானப் பயணிகளின் பயணப்பெட்டிகளைக் கையாளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது அமைச்சின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
அத்தகைய ‘இ-பாஸ்’ அட்டைதாரர்களுக்கு மனிதவள அமைச்சிடம் தெரிவிக்கப்பட்ட சம்பளம், பணிக்கான விவரங்கள் பொய்யானவை என்பதை முதற்கட்ட விசாரணைகள் காட்டுவதாக அமைச்சு கூறியுள்ளது.
அவர்களுடன் சேர்த்து, இதர வேலை அனுமதி அட்டை வைத்துள்ள பலரும் அமைச்சிடம் குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு மாறாக, பயணப்பெட்டிகளைக் கையாளும் பணிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்த வேலை அனுமதி அட்டை குற்றங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்துவருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, தனது பணிகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு சாட்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது வேலை அனுமதி அட்டைகளுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை உறுதிசெய்வதும் விதிமுறை சார்ந்த குறைபாடுகளை உடனடியாகச் சீர்செய்வதும் அந்த உத்தரவில் அடங்கும்.
வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல், வெளிநாட்டு ஊழியரைச் சட்டவிரோதமாக வேறு பணிகளில் ஈடுபடுத்தும் முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், வேலை அனுமதி அட்டை ஊழியர்களைப் பணியமர்த்த தடை விதிக்கப்படலாம்.
