பாடாங்கிற்கு அருகில் உள்ள வேலையிடத்தில் 43 வயது ஆடவர் கட்டடத்தின் உயரத்திலிருந்து கயிறுவழியாக இறங்கியபோது மே 30ஆம் தேதி கீழே விழுந்து மாண்டார்.
கொன்னோட் டிரைவ்வில் உள்ள 18 மீட்டர் உயர எஃகு கட்டடத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது கயிறு அருந்ததில் ஊழியர் கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு சொன்னது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஆடவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
சம்பவம் குறித்து விசாரிப்பதகாகக் கூறிய மனிதவள அமைச்சு, உயரமான எஃகு கட்டடங்களிலிருந்து இறங்கும் ஊழியர்கள் விழுவதைத் தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படி நினைவூட்டியது.
உயிரிழந்த ஆடவர் ஷோக் இன்டர்னேஷனல் என்ற நிறுவனத்தின் ஊழியர்.
உயரமான இடங்களில் வேலை செய்யும்போது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதற்காக இவ்வாண்டு பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை மொத்தம் 13 வேலை நிறுத்த உத்தரவுகளும் $375,000க்கும் அதிகமான அபராதங்களும் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
ஏறக்குறைய 550 வேலையிடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது.