மரினா ஈஸ்ட் டிரைவ் பகுதியில் உள்ளதொரு கட்டுமானத் தளத்தினுள் சென்ற கான்கிரீட் கலவை லாரி ஒன்று, வெளிநாட்டு ஊழியர்மீது மோதியதால் அவர் உயிரிழந்தார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயது கட்டுமான ஊழியர் உயிரிழந்துவிட்டதை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தார்.
இந்நிலையில், கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக 41 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி காலை 7.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
வாகன எண்ணெய் நிரப்புவதற்காக மரினா ஈஸ்ட் தளத்திற்குள் லாரி சென்றதாகவும் அப்போது கோ கொக் லியோங் என்டர்பிரைஸ் நியமித்திருந்த அந்தக் கட்டுமான ஊழியர் மீது லாரி மோதியதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மொத்த கட்டுமானத் தளமும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவ்விடம் தோண்டி எடுக்கப்பட்ட பொருள்களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
இந்நிலையில், உயிர்க்கொல்லிச் சம்பவம் நேர்ந்த அந்த எண்ணெய் நிரப்பும் பகுதியில் வாகனம் சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்துமாறு அமைச்சு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மனிதவள அமைச்சும் காவல்துறையும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களின் கட்டுமானத்துக்கு, பொருள்களையும் வளங்களையும் ஒன்றுசேர்க்கும் ஓர் இடமாக மரினா ஈஸ்ட் டிரைவ் வட்டாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ள ஏழாவது வேலையிட மரணம் இது.
இத்துடன் 2024ஆம் ஆண்டில் 26 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.