லோயாங்கில் ஊழியர் ஒருவர் 30 மீட்டர் உயரப் பாரந்தூக்கியிலிருந்து புதன்கிழமை (ஆகஸ்ட் 6) மீட்கப்பட்டார்.
லோயாங் நார்த் டிரைவில் உள்ள கட்டுமானத்தளம் ஒன்றில் மீட்பு நடவடிக்கை இரவு 9.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
நோய்வாய்ப்பட்டிருந்ததால் ஊழியரால் தாமாகக் கீழே வர இயலவில்லை.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகஸ்ட் 7ஆம் தேதி ஃபேஸ்புக்கில் இந்தத் தகவலைப் பதிவிட்டது.
குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த தீயணைப்பாளர்களும் நிபுணர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏணியின் வழியாகப் பாரந்தூக்கியை அடைந்த நிபுணர்கள், மீட்புக் கருவிகளின் உதவியோடு தூக்குப் படுக்கையின் மூலம் ஊழியரைக் கீழே கொண்டுவந்தனர். மருத்துவ உதவியாளர்கள் அந்த ஊழியரின் உடல்நிலையைப் பரிசோதித்த பிறகு, அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.