பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைத்து மக்களும் தங்கள் பண்பாட்டு வேர்களைத் தக்கவைத்துக் கொள்வதுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் மிக முக்கியம் என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
ஹவ்காங் உணவங்காடி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) காலை தொகுதி உலா மேற்கொண்ட திரு சிங், அதனைத் தொடர்ந்து அங்காடிக்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது, தமிழ் உள்ளிட்ட இருமொழித் திறன், அது சார்ந்த இருமொழிக் கல்விக் கொள்கையில் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இருமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சிங், அக்கொள்கை சிங்கப்பூர் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் சொன்னார்.
சிங்கப்பூர் இத்தனை ஆண்டுகாலமாக இருமொழிக் கல்விக் கொள்கையைச் சிறப்பாகப் பேணிவரும் நிலையில், “பள்ளிகளுக்கு அப்பாலும் அவரவர் தாய்மொழி புழக்கத்தில் இருக்க வேண்டும். மொழி வழியாகப் பன்முகத்தன்மையை பேணிடல் வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம். எனினும், அவரவரின் சொந்த பண்பாட்டு வேர்கள் மிகவும் இன்றியமையாதவை,” என்றார் திரு சிங்.
கொள்கை அளவில் பார்க்கையில், பள்ளியில் சில குழந்தைகளுக்கு மொழி பயில்வது கடினமாக இருக்கலாம் என்றாலும் அதைக் கற்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளைத் திரு சிங் பாராட்டினார்.
மேலும், மக்கள் எவ்வளவு விரைவாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதைப் பொறுத்து, தாய்மொழியை வெவ்வேறு நிலைகளில் தக்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டினார்
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து பேசிய திரு சிங், “கல்விக்கூடங்களைத் தாண்டியும் அவரவர் தாய்மொழி புழக்கத்தில் இருக்க வேண்டும். அதற்கு, பெரியவர்கள் வேலையிடம் உள்ளிட்ட இதர இடங்களிலும் தாய்மொழியைப் புழங்க வேண்டும். மொழியின் முக்கியத்துவத்தை அறிந்ததனாலேயே, பாட்டாளிக் கட்சி இம்முறை தமிழ் வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடச் செய்துள்ளது.
“தமிழ் பேசும் வேட்பாளரைக் தேர்தல் களத்திற்குக் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சிக்கு இத்தனை ஆண்டு ஆகியுள்ள நிலையில், அப்படி ஒரு வேட்பாளரைக் கண்டறிவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இம்முறை சரளமாகத் தமிழ்மொழி பேசும் வேட்பாளரை முன்னிறுத்த இயன்ற அளவு முயற்சி எடுத்தோம். அவ்வகையில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி பெண் வேட்பாளர் பெரிஸ் வி பரமேஸ்வரி, 51, எங்கள் குழுவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி,” என்றார் திரு சிங்.
பல இன மக்கள் வாழும் நாட்டில் வாழ்வது அழகானது என்ற திரு சிங், அதுகுறித்தும் கருத்துரைத்தார்.
“பன்முகத்தன்மை மிக்க சூழலில் ஒன்றுபட்ட மக்களாக நாம் எப்படி திகழ்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒருவர் தமது தாய்மொழியுடன் பண்பாடு குறித்தும் பெருமைப்படுவது இயல்பானது. எனினும், நம் அருகில் இருக்கும் சக மனிதர்களும் தத்தம் மொழி, பண்பாடு குறித்து பெருமைகொள்ள உரிமையுண்டு என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை மதித்து நடக்கவேண்டும்,” என்று திரு சிங் வலியுறுத்தினார்.