தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேயர் பதவி தேவையற்றது எனும் கருத்தில் மாற்றமில்லை: பிரித்தம் சிங்

2 mins read
4264cc5a-9b79-48df-8c34-c7435baed749
பாட்டாளிக் கட்சி. செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து): கட்சியின் தலைவர் சில்வியா லிம், தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், ஜாலான் காயு தனித்தொகுதி வேட்பாளர் ஆண்ட்ரே லோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தேர்தல் அறிக்கை தொடங்கி பிரசாரக் கூட்டம் வரை, மேயர் பதவி தேவையற்றது என்று முழங்கிவரும் பாட்டாளிக் கட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) மாலை ஃபெர்ன்வேல் உணவங்காடி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அதே கருத்தை வலியுறுத்தியது.

சமுக மேம்பாட்டு மன்றங்கள் மேயரால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக அடித்தள அளவில் மக்களின் அன்றாட அக்கறைகளைச் செவிமடுத்துவரும் வேளையில், மேயர் பதவி அகற்றப்படும்போது எழும் இடைவெளி குறித்த தமிழ் முரசின் கேள்விக்கு பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், 48, பதிலளித்தார் 

“வேலைப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் தற்போது சமூக சேவை அலுவலகங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

“எனினும், இன்னும் அவை செயல்பட்டு வருகின்றன. எனவே, அவற்றின் வழக்காற்று முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என்றார் திரு சிங்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏறத்தாழ 670,000க்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்து, ஏறக்குறைய $1.3 பில்லியன் மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் மூலம் வாழ்க்கைச் செலவினங்களுக்குக் கைகொடுத்து, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்ந்துவரும் சமூக மன்றங்களின் பங்களிப்பை மேற்கோள்காட்டியபோது, அதை ஒப்புக்கொண்ட திரு சிங் அதற்கும் பதிலளித்தார்.

“சிடிசி பற்றுச்சீட்டுகளை, நிதியமைச்சின் பற்றுச்சீட்டுகள் எனச் சொல்லிவிடுவேன். அவற்றை நேரடியாக, சட்டப்பூர்வமான வகையில் மக்களிடம் கொண்டுசேர்க்க இயலும். எனவே, மேயர் பதவியின் பங்களிப்பு இல்லாமலேயே அதனைச் செயல்படுத்த முடியும்,” என்றார் அவர்.

சிறப்பான வழியில் பயணிக்க இலக்கு

இதற்கிடையே, அதே செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஜாலான் காயு வேட்பாளர் ஆண்ட்ரே லோ 33, வாக்கு சேகரிக்க செல்லுமிடங்களில் நம்பிக்கைமிக்க ஆதரவு கிடைத்து வருவதாகச் சொன்னார்.

வாய்ப்பளித்தால் புத்தாக்க சிந்தனையுடன், தேசிய அளவிலான பிரச்சினை தொடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வாழ்க்கை செலவினங்கள்வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு அயராது குரல்கொடுப்பேன் என்றார் திரு லோ.

தொழிலாளர் இயக்கத் தொடர்புடைய மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள், சங்கத்தில் இருந்தவாறும் மக்களுக்குச் சேவைசெய்யலாம் என்று பாட்டாளிக் கட்சி கூறியுள்ளது.

அதேபோல, பாட்டாளிக் கட்சியினரும் தொண்டூழியம் செய்தவாறே மக்கள் சேவையைத் தொடரலாமே என்று தமிழ் முரசு திரு லோவிடம் கேட்டது. “தொண்டூழியம் புரிவதன்மூலம், கணிசமாக மக்களுக்குச் சேவையாற்றலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் பேரளவிலான தாக்கத்தை ஏற்படுத்த, அவையில் ஏராளமான எதிர்க்கட்சிக் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

“அறுவர் என்ற எண்ணிக்கையில் இருந்த பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை சென்றமுறை 12ஆக உயர்ந்தது. எனவே, தொடர்ந்து சிறப்பான வழியில் பயணிக்க இலக்குகொண்டுள்ளோம்,’‘ என்றார் திரு லோ.

மே 3ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திரு லோ, மசெகவின் இங் சீ மெங்கைக் எதிர்த்துக் களம் காண்கிறார்.

குறிப்புச் சொற்கள்