நாடாளுமன்றக் குழுவிடம் பொய் உரைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கு அக்கட்சி முறைப்படி கடிந்துரைக் கடிதம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவின் விசாரணையில் திரு சிங் கட்சியின் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்தியச் செயற்குழு ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் கூடி, அறிக்கையைப் பரிசீலித்து, குழுவின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டது.
எனினும், கட்சியின் கொள்கைகள் அல்லது நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நோக்கம் திரு சிங்கிற்கு இல்லை என்று செயற்குழு கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு சிங்கின் நடவடிக்கைகள், அவரது முடிவெடுக்கும் திறனைக் காட்டுவதாகவும் அறிக்கை கூறியது.
விசாரணையின்போது நடுநிலையைப் பேணும் வகையில், கட்சித் தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் பைசல் மனாப், பிரித்தம் சிங் ஆகியோர் செயற்குழுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றக் குழுவிடம் தவறான தகவல்களை வழங்கியதற்காக திரு சிங் இரு குற்றச்சாட்டுகளின்கீழ் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உட்கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரு சிங் அடுத்த உட்கட்சித் தேர்தலில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் தற்போதைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், எப்போது உட்கட்சித் தேர்தல் நடைபெறும் என்று அது குறிப்பிடவில்லை.
மேலும், கட்சியின் சிறப்புப் பணி உறுப்பினர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

