காற்றடிக்கும் திசையில் செல்கிறது பாட்டாளிக் கட்சி: பிரதமர் வோங்

காற்றடிக்கும் திசையில் செல்கிறது பாட்டாளிக் கட்சி: பிரதமர் வோங்

படம்: சாவ் பாவ்

25 Oct 2026 - 12:36 pm

2 mins read

ஆளும் கட்சியாக இருப்பது எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை கொடுப்பதன்று, கடினமான முடிவுகளை எடுப்பது என்ற பிரதமர் லாரன்ஸ் வோங், வீடமைப்பு, வெளிநாட்டு ஊழியர் விவகாரங்களில் பாட்டளிக் கட்சியின் நிலைப்பாட்டைக் கடுமையாக சாடினார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு வோங், நாடாளுமன்றத்தில் கொள்கை விவகாரங்கள் குறித்து பாட்டாளிக் கட்சி பேசினாலும், காலப்போக்கில் அவர்களின் நிலைப்பாடு சீரானதாகவோ நிலையானதாகவோ இல்லை என்று எதிர்க்கட்சியை விமர்சித்தார்.   

கடந்த 2019ல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை விலை குறைந்தபோது புதிய வீடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என வாதிட்ட பாட்டாளிக் கட்சி, கொவிட்-19 சூழலால் புதிய வீடுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதும், 2023ல் அரசு போதுமான வீடுகளைக் கட்டவில்லை எனக் குற்றம் சாட்டியது. ஆனால் தனது முந்தைய நிலைப்பாட்டை அக்கட்சி ஒப்புக்கொள்ளவே இல்லை என்று திரு வோங் குறிப்பிட்டார்.   

பெருந்திரளாகக் கூடியிருந்த கட்சியினர் முன்னிலையில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் உரையாற்றிய அவர், “பல குழுக்கள் தங்களுக்கு முக்கியமான விவகாரங்களைப் பற்றிப் பேசும். ஆனால், ஆளும் கட்சியான நாங்கள் பெரிய படத்தைப் பார்க்க வேண்டும். எல்லோருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பதை சொல்லிவிட முடியாது,” என்று கூறினார்.

எதிர்க்கட்சி குறித்து கருத்துரைத்த திரு வோங், வீடமைப்பை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

“2019ல் மறுவிற்பனை விலை சரிந்தபோது, குறைவான புதிய வீடுகளைக் கட்ட வேண்டும் என்று பாட்டாளிக் கட்சி வாதிட்டது. கொவிட்-19 காரணமாக கட்டுமானம் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

‘‘2023ல் வீடுகள் போதவில்லை என்று அரசை அக்கட்சி விமர்சித்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதை அவர்களே நினைவுபடுத்தவில்லை,” என்று சுட்டிக்காட்டினார் திரு வோங்.

வெளிநாட்டவர் கொள்கையிலும் இதே நிலைதான் என்ற அவர், “2012ல் அரசு வெளிநாட்டவர் கொள்கையைக் கடுமையாக்கியபோது, அதில் நீக்குப்போக்கு தேவை என்று பாட்டாளிக் கட்சி கேட்டது. 

“பின்னர் 6.9 மில்லியன் மக்கள்தொகை விவகாரம் குறித்து விவாதத்தின்போது, வெளிநாட்டு ஊழியர் வளர்ச்சியைப் பூஜ்ஜியமாக வைக்க வேண்டும் என்று அக்கட்சி சொன்னது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

“அவ்வகையில், அண்மையில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது ஒதுக்கீட்டைத் தளர்த்த அக்கட்சி கேட்டுக்கொண்டது.

“அரசியல் காற்று வீசும்போது பாட்டாளிக் கட்சியின் நிலை மாறுகிறது. ஆனால் வெளிநாட்டவர் கொள்கை இவ்வாறு முன்னும் பின்னும் மாறக்கூடாது. சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று திரு வோங் எச்சரித்தார்.

பிரான்ஸ் போன்ற நாடுகளில் இளையர்கள் வீதிக்கு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், எளிமையான தீர்வுகளைச் சொல்லும் மக்கள் கவர்ச்சி அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மக்கள் செயல் கட்சிபாட்டாளிக் கட்சிஅரசியல்சிங்கப்பூர்