நாடாளுமன்றத்தின் தரத்தை உயர்த்த பாட்டாளிக் கட்சி ஆதரவளிக்கும்: பிரித்தம் சிங்

1 mins read
ff8c87d2-3763-42c9-ab27-6d5999bf2657
பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல், உருமாற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதுடன் சிங்கப்பூரர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.

பாட்டாளிக் கட்சிக்குத் தலைமை தாங்கும் அவர், சிங்கப்பூரின் 15வது நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) ஒன்றுகூடியபோது உரையாற்றினார். நாடாளுமன்ற நாயகராக மீண்டும் நியமிக்கப்பட்ட திரு சியா கியென் பெங்கிற்கு அவர் வாழ்த்து கூறினார்.

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரர்களின் குரல்கள் கேட்கப்படுவதை மன்றம் உறுதிசெய்யவேண்டும் என்றார் திரு சிங்.

“அடுத்தடுத்த நாடாளுமன்ற அமர்வுகளின்போதெல்லாம் நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பது பற்றிச் சிங்கப்பூரர்களுக்குக் கேள்விகள் இருக்கும். கூடுதல் கலந்துரையாடல்கள், விவாதங்கள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்,” என்று திரு சிங் வலியுறுத்தினார்.

“நாடாளுமன்றத்தின் தரத்தையும் நாட்டின் தரத்தையும் உயர்த்த முற்படும் திரு சியாவின் முயற்சிகளுக்குப் பாட்டாளிக் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலைப் பாதுகாப்பு, இளையரிடையே வேலையின்மை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு இடையே திறன் மேம்பாடு ஆகியவை முக்கியக் கவலைகள் என்று திரு சிங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்