தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லாத் தீர்வுகளையும் அலசுமாறு மசெகவுக்குப் பாட்டாளிக் கட்சி வேண்டுகோள்

2 mins read
4055d65c-eb04-4b6c-8afe-5db3390b148d
பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றினார். - படம்: சாவ்பாவ்

பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியதையடுத்து பல தரப்பினரைத் தொடர்புகொள்ளுமாறும் சட்ட திட்டப் பரிந்துரைகள் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் ஆராயுமாறும் பாட்டாளிக் கட்சி, மக்கள் செயல் கட்சியைக் (மசெக) கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை அலசப்படாத பரிந்துரைகளையும் ஆராய்ந்து பார்க்குமாறு பாட்டாளிக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) ஐடிஇ காலேஜ் சென்ட்ரல் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கிளையில் தேசிய தினப் பேரணி உரை நடைபெற்ற பிறகு பாட்டாளிக் கட்சி அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்தது.

வருங்காலத்தில் மீள்திறன்மிக்க தேசத்தை உருவாக்க எல்லாத் தரப்பினரும் மேற்கொள்ளும் முயற்சிகளில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவேண்டும் என்று அக்கட்சி குறிப்பிட்டது.

சிங்கப்பூர் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத சிங்கப்பூரர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு செயல்படுமாறு பிரதமர் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் கேட்டுக்கொண்டார். ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் யாரையும் சார்ந்திராமல் வாழ்வதற்கும் புதிய திட்டங்களை திரு வோங் தமது உரையில் அறிவித்தார்.

நிலையற்றிருக்கும் உலகப் பொருளியல் போன்ற, சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றியும் அவர் பேசினார்.

அரசாங்கத்தின் சில புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசிய பாட்டாளிக் கட்சி, தனது பரிந்துரைகள், கவலைகளையும் முன்வைத்தது. பொருளியல் நிலவரத்தைக் கையாள அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளைப் பற்றிப் பேசிய அக்கட்சி, காலத்துக்கு ஏற்றவாறு சிங்கப்பூர் பொருளியல் செயல்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டதைத் தாங்களும் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தது.

தற்போது வர்த்தகங்கள், ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கவலைகளைக் கையாளுமாறு பாட்டாளிக் கட்சி, அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. அந்த வகையில், அதிகரிக்கும் வாடகை, கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குறைவாகப் பதிவாகிவரும் நிகர வருமான வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களைக் கையாளுமாறு அக்கட்சி வேண்டுகோள் விடுத்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்