மக்கள் சக்திக் கட்சி சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் கொள்கைகளையும் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கக் கொள்கைகளையும் அதன் முதல் பேரணியில் குறைகூறியுள்ளது.
தெம்பனிசில் உள்ள தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் பாட்டாளிக் கட்சியும் அதன் தலைவர் பிரித்தம் சிங்கும் மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடாததன் மூலம் குடியிருப்பாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகச் சாடினார்.
“நான் மிகவும் கோபமாக இருந்தேன். அவர்கள் மரின் பரேட்டில் உள்ள கிட்டத்தட்ட 130,000 வாக்காளர்களைக் கைவிட்டனர். எதற்காக? தெம்பனிஸில் நான்கு முனை போட்டிக்கு வருவதற்காகவா?,” என்று கேள்வி எழுப்பினார் திரு கோ.
சரியான மனநிலையில் உள்ள யாரும் இப்படி ஒரு உத்தியைக் கையாண்டிருக்க மாட்டார்கள் என்ற அவர், மக்கள் சக்திக் கட்சி நாடாளுமன்றம் சென்று தடுப்பூசி பாதுகாப்பு விவகாரம் பற்றி கேள்வி எழுப்புவதைத் தடுப்பதற்காக பாட்டாளிக் கட்சி தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவதாகத் திரு கோ கூறினார்.
மே 3ஆம் பொதுத் தேர்தலில் தெம்பனிஸ் குழுத்தொகுதி நான்குமுனைப் போட்டியைச் சந்திக்கிறது. மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை ஐந்து உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதியில் போட்டியிடுகின்றன.
பாட்டாளிக் கட்சியும் மக்கள் சக்திக் கட்சியும் முதன்முறையாக அந்தக் குழுத்தொகுதியில் களமிறங்குகின்றன.
மக்கள் சக்திக் கட்சியின் பேரணியில் தெம்பனிஸ், அங் மோ கியோ குழுத்தொகுதிகளில் களமிறங்கும் பத்து வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் எட்டு பேர் மட்டும் உரையாற்றினர்.
தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தைத் தவிர வேலை பாதுகாப்பின்மை, சிங்கப்பூரின் குடிநுழைவுக் கொள்கைகள் குறித்தும் பேரணியில் பேசப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பேரணியை முடித்துவைத்து பேசிய திரு கோ, திரு மஸாகோஸ், திரு ஃபைசல், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சித் தலைவர் ரெனோ ஃபோங் ஆகியோர் அவர்களின் கொள்கைகள் பற்றி வட்ட மேசை விவாதத்தில் பேசும்படி சவால் விடுத்தார்.
“எங்கள் கொள்கைகள் பற்றி நாங்கள் விவாதிப்போம், இதை நான் உறுதியுடன் சொல்கிறேன் நாங்கள் எங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்வோம்,” என்றார் திரு கோ.

