தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயீசா கான் விவகாரத்தால் பாட்டாளிக் கட்சிக்குச் சிறிய பின்னடைவு: லோ

3 mins read
‘சிங்கப்பூருக்கென தமது உள்ளத்தில் சிறப்பிடம் கொண்டவர் பிரித்தம் சிங்’
ae0cbdb5-7cd2-4885-b819-c15b4117fb3a
நீதிமன்ற வளாகத்தில் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்தது பற்றி அக்கட்சியின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த பிரித்தம் சிங், சில்வியா லிம், ஃபைசல் மனாப் ஆகியோருக்கு 2021 ஆகஸ்ட்டில் தெரிந்திருந்தது.

ஈராண்டுகளுக்குப் பிறகுதான் தமக்கு இத்தகவல் தெரிந்ததாக அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் நீதிமன்றத்தில் கூறினார். இத்தகவல் ஏன் இவ்வளவு தாமதமாக வெளிவந்தது என தாம் எண்ணியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பிரித்தம் சிங் பொய்யுரைத்ததாக அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (அக்டோபர் 23) நடந்த வழக்கு விசாரணையில் நான்காவது சாட்சியாக திரு லோ இடம்பெற்றார்.

திரு லோ, சிங், திருவாட்டி சில்வியா லிம் மூவரும் 2021 அக்டோபரில் சந்தித்தது பற்றி துணைத் தற்காப்பு வழக்கறிஞர் பென் மெத்தாயஸ் டான் திரு லோவிடம் கேட்டிருந்தார்.

திருவாட்டி கான் பொய்யுரைத்தது பற்றி மூவரும் தம் வீட்டில் கலந்துரையாடியதாக திரு லோ கூறினார். திருவாட்டி லிம் ஏற்பாடு செய்திருந்த அச்சந்திப்பின்போது பொய் விவகாரம் பற்றி திரு லோவிடம் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி கான், பொய்யை ஒப்புக்கொள்வதற்காக செய்தியாளர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய எண்ணியிருந்ததாக திருவாட்டி லிம் தம்மிடம் கூறியபோது, “நாடாளுமன்றத்தில் அவர் பொய் சொன்னதால், அவர் உண்மை சொல்வதற்கு நாடாளுமன்றமே சரியான இடம்,” என்று தாம் பதிலளித்ததாக திரு லோ கூறினார்.

கட்சியிலிருந்து திருவாட்டி கானை நீக்கப்போவதாக அவ்விரு தலைவர்கள் கூறியதையும் திரு லோ நினைவுகூர்ந்தார்.

2021 அக்டோபர் 18ஆம் தேதி திரு லோவுக்கும் திருவாட்டி லிம்முக்கும் இடையே நடந்த மற்றொரு சந்திப்பு பற்றி அரசுத் தரப்பு கேட்டது.

திருவாட்டி கான் பொய்யுரைத்தது குறித்து நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருந்ததாக திருவாட்டி லிம் தம்மிடம் கூறியதாக திரு லோ நீதிமன்றத்தில் கூறினார்.

“அவரது மன்னிப்பு அறிக்கையின் வரைவை நாம் பார்க்கவேண்டும்,” என்று திருவாட்டி லிம்மிடம் தாம் கேட்டிருந்ததைத் திரு லோ நினைவுகூர்ந்தார்.

ஏன் என திருவாட்டி லிம் கேட்டபோது, “அந்த மன்னிப்பு மற்றொரு பொய்யில் முடிந்துவிடக்கூடாது என விரும்புகிறேன்,” என தாம் கூறியதாக திரு லோ சொன்னார்.

2021 நவம்பர் 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் திருவாட்டி கான் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அதை விசாரிப்பதற்கு ஒழுங்குமுறைக் குழு ஒன்றை அமைக்கும்படி தாம் சிங்கிடம் குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்தியதாக திரு லோ கூறினார்.

நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட பொய்யை அங்கேயே தெளிவுபடுத்த வேண்டுமா என தற்காப்புத் தரப்பு கேட்ட ஒரே கேள்விக்குத் திரு லோ, “ஆம்” எனப் பதிலளித்தார்.

‘சிங்கப்பூருக்கென தமது உள்ளத்தில் சிறப்பிடம் கொண்டவர் பிரித்தம் சிங்’

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு லோ, சிங் மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.

“இது ஒரு சிறிய பின்னடைவு என்றே நான் கருதுகிறேன். புதிய தலைவர்களும் அமைப்புகளும் சந்திக்கவேண்டிய வழிமுறைதான். அவை மேம்படும்போது அவ்வப்போது அங்கும் இங்கும் சிறு பின்னடைவுகள் ஏற்படும். சிங்கப்பூரில் முன்னேற்றம் அடைவது என்ற பொதுவான இலக்கை நாம் மறந்துவிடக்கூடாது,” என்றார் திரு லோ.

இந்த விவகாரத்தை சிங் இன்னும் நன்றாகக் கையாண்டிருக்கலாமா என்று கேட்டதற்கு, சிங் தம்மால் இயன்றதைச் செய்திருப்பதாக திரு லோ கூறினார்.

எந்த அரசியல் கட்சிக்கும் தலைவருக்கும் சவால்மிக்கச் சூழ்நிலைகள் ஏற்படும் என்றும் கற்றல் பயணத்தில் அவை அங்கம் வகிப்பதாகவும் திரு லோ சொன்னார்.

சிங்கப்பூர் இப்போது முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமாக மாறிவிட்டதாக தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

யார் நல்ல அரசியல்வாதி, யார் நல்ல அரசியல்வாதி இல்லை என்பது வாக்காளர்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

“பிரித்தம் நல்ல அரசியல்வாதி என நம்புகிறேன். சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்குமான உள்ளம் கொண்டுள்ள ஆற்றல்மிக்க, திறமையான தலைவராக அவர் இருக்கிறார்,” என்றார் திரு லோ.

குறிப்புச் சொற்கள்