எதிர்வரும் பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சிக்காக அப்துல் முஹாய்மின் அப்துல் மாலிக் உத்தேச வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீஸா கானின் இடத்தை நிரப்புவார் என்று கூறப்படுகிறது.
காம்பஸ்வேல் வட்டாரத்தில் மின்தூக்கி சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்வதாகத் திரு அப்துல் சமூக ஊடகம் வழி தெரிவித்தார்.
அல்ஜூனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் மூத்த சொத்து மேலாளராக உள்ள 35 வயது அப்துல் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு மின்தூக்கி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
காம்பஸ்வேல் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குத் தொகுதி உலா செல்லும் படங்களையும் திரு அப்துல் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது செங்காங் குழுத்தொகுதி. காம்பஸ்வேல் வட்டாரத்திற்குப் பொறுப்பு வகித்த ரயீஸா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன காரணத்தால் அப்பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின்னர் ஜேமஸ் லிம், ஹி டிங் ரூ, லூயிஸ் சுவா ஆகியோர் காம்பஸ்வேல் பகுதியை அவர்களுக்குள் பிரித்துக்கொண்டு மக்களுக்கு உதவுகின்றனர்.