மெல்ல மெல்ல சிங்கப்பூர் அரசியலில் பிடியை இறுக்கி வரும் பாட்டாளிக் கட்சி இந்தத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியைத் தக்கவைக்கும் இலக்கில் காய் நகர்த்தியுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு இணையாக அதிரடி மாற்றங்களைப் பாட்டாளிக் கட்சியும் அரங்கேற்றியது.
கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், 48, கட்சித் தலைவர் சில்வியா லிம், 60, இருவரும் புதிய தொகுதிகளுக்குத் தலைமை ஏற்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமைத்துவம் ஒட்டுமொத்தமாக அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
பிரித்தம், சில்வியாவுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம், 47, கட்சியின் ஏற்பாட்டுக்குழுத் துணைச் செயலாளர் பஃட்லி ஃபவ்ஸி, 36, புதுமுகம் கென்னத் டியோங், 36 ஆகியோர் அல்ஜுனிட்டில் போட்டியிடுகின்றனர்.
2020 பொதுத் தேர்தலில் திரு ஃபட்லி, மரீன் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த தேர்தலில் அல்ஜுனிட்டில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைச் சுட்டிய திரு சிங், “இத்தொகுதியில் வெற்றி பெறுவது உறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தம் அல்ல,” என்றார்.
தெம்பனிசில் உள்ள பாய்சிங் உயர்நிலைப் பள்ளியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தமது ஐவர் அணியுடன் வந்திருந்த திரு பிரித்தம் சிங், வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஏப்ரல் 18ம் தேதி நிலவரப்படி அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 144,298 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அத்தொகுதியைக் கடந்த தேர்தலின்போது 59.95% வாக்குகளுடன் தக்கவைத்து கொண்டது பாட்டாளிக் கட்சி.
தொடர்புடைய செய்திகள்
“இன்னும் சமநிலையான அரசியல் அமைப்பும் நாடாளுமன்றமும் சிங்கப்பூருக்கு நல்லது என்று சிங்கப்பூரர்கள் எங்களுடன் உடன்பட்டால், அதற்கேற்ப அவர்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று கூறினார் இத்தொகுதியில் நான்காவது முறையாகப் போட்டியிடும் திரு சிங்.