அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக ஏற்படக்கூடிய நிலையின்மையை எதிர்கொள்ள புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பணிக்குழு, தனியார் துறையுடன் கலந்துரையாடி அதற்கு ஏற்பட்டுள்ள சவால்கள், உத்தேச நடவடிக்கைகள் போன்றவை பற்றி தெரிந்துகொள்ளும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.
பணிக்குழுவுக்குத் திரு கான் தலைமை தாங்குகிறார்.
எப்ரல் 2ல், உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வரி விதித்தார்.
சிங்கப்பூருக்குப் பத்து விழுக்காடு வரி விதிக்கப்பட்டது.
புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 9ஆம் தேதியில் இருந்து நடப்புக்கு வருகிறது.
இதனால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள புதிய பணிக்குழு அமைக்கப்படுவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
பணிக்குழு தனது திட்டங்களை வகுத்து வருவதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) பிரதமர் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உடனடி நிலையின்மைகளை எதிர்கொள்ள வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவுவதே புதிய பணிக்குழுவின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தகங்கள் மற்றும் ஊழியர்களின் மீள்திறனை வலுப்படுத்தவும் புதிய பொருளியல் சூழலுக்கு ஏற்ப செயல்பட உதவவும் பணிக்குழு செயல்படும் என்று திரு வோங் கூறினார்.
பணிக்குழுவில் பொருளியல் சார்ந்த அமைப்புகளுடன் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
புதிய பணிக்குழு குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் கோரியிருந்தார்.
பணிக்குழு தகவல் பரிமாற்றத்தில் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.
தனியார் துறை பிரதிநிதிகளிடமிருந்து அடித்தளத் தகவல்களைப் பணிக்குழு திரட்டும் என்றார் அவர்.
அவற்றின் மூலம் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்ளும் வழிவகைகள் குறித்து தனியார் துறையுடன் பணிக்குழு கலந்துரையாடும் என்று திரு கான் கூறினார்.