தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிட விபத்து: மாண்ட ஊழியர் சக ஊழியர் சொன்னதைப் பின்பற்றவில்லை

2 mins read
f8991bae-abd9-40bf-aa31-2f36b753c4e0
இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் திரு பொன்ராமன் ஏழுமலை, 23, வேலையிட விபத்தில் 2023, டிசம்பர் 2ஆம் தேதி மாண்டார். - படம்: திரு பொன்ரானம் ஏழுமலையில் குடும்பம்

கனரக வாகனத்துக்குப் பின்புறத்தில் இருந்த இயந்திரம் மூடியதால் நெஞ்செலும்பு நொறுங்கி இறந்த வெளிநாட்டு ஊழியர், வேலை நடைமுறை தொடர்பான சக ஊழியரின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்று மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்தபோது கனரக வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்த அந்தச் சக ஊழியர், மாண்ட திரு பொன்ராமன் ஏழுமலையின் பாதுகாப்புக்கும் பொறுப்பு வகித்தார்.

2023இல் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ஏழுமலை ஜூரோங் சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது வேலையிட விபத்தில் இறந்தார். அது தொடர்பான விவரங்களை மரண விசாரணை அதிகாரி பிரெண்டா சுவா மே 16ஆம் தேதி வெளியிட்டார்.

டிஎம்சி கான்கிரீட் பம்பிங் சேர்விசஸ் (TMC Concrete Pumping Services) என்ற நிறுவனத்தில் திரு ஏழுமலையுடன் திரு வெள்ளைச்சாமி சரவண குமார் சம்பவ தினத்தன்று வேலை செய்துகொண்டிருந்தார்.

இரவு சுமார் 10.50 மணியளவில் அவர்கள் இருவரும் பணி முடிந்து கனரக வாகனத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திரத்தை பழைய நிலைக்குக் கொண்டுவந்தபோது விபத்து நேர்ந்தது.

கனரக வாகனத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திரத்துக்கும் கனரக வாகனத்துக்கும் இடையில் திரு ஏழுமலை சிக்கிக்கொண்டார்.

அதிலிருந்து வெளியான பின் சுயநினைவுடன் இருந்த அவரிடம் கடுமையான காயங்கள் காணப்படவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாக திரு ஏழுமலை குறிப்பிட்டார்.

நெஞ்சலெலும்பில் கடுமையான முறிவுகளுடன் ஃபேரர் பார்க் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஏழுமையின் இரு நுரையீரல்களிலும் ரத்தம் கசிந்தது. ஏறக்குறைய 18 மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.

கனரக வாகனத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திரம் முழுமையாக மூடப்பட்ட பிறகுதான் அதற்குக் கீழ் உள்ள தகடுகளை திரு ஏழுமலை அகற்றியிருக்கவேண்டும் என்று விசாரணையின்போது நிறுவன இயக்க மேலாளர் தெரிவித்தார்.

திரு வெள்ளைச்சாமி கனரக வாகனத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திரத்தையோ திரு ஏழுமலையையோ கவனிக்க தவறினார்.

திரு ஏழுமலையின் மரணம் வேண்டுமென்றே விளைவிக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற நீதிபதி சுவா, அது வேலையிடம் தொடர்பான விபத்து என்றார்.

குறிப்புச் சொற்கள்