‘ரிசோட்ஸ் வோர்ல்டு’ செந்தோசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை (செப்டம்பர் 29) வேலையிட விபத்தில் 45 வயது நபர் ஒருவர் மாண்டார்.
செந்தோசா நுழைவாயில் எண் 8ல் நடந்த இந்த விபத்து குறித்துத் தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
அந்த நபர் சுயநினைவின்றிக் காணப்பட்டதாகவும் அவர் உயிரிழந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர் குழு அறிவித்ததாகவும் கூறப்பட்டது.
அந்த நபரின் மரணத்தில் சூழ்ச்சி இருப்பதாக சந்தேகிக்கவில்லை எனக் காவல்துறை தெரிவித்தது.
விசாரணைத் தொடர்ந்து நடந்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னாள் கடல்துறை அரும்பொருளகம் இருந்த இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ரிசோட்ஸ் வோர்ல்டு செந்தோசாவின் பேச்சாளர் தெரிவித்தார். நீர்வாழினக் காட்சியகத்தை விரிவாக்குவதற்கு வசதியாக இந்த அரும்பொருளகம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கக் பணிகளுக்கான ஒப்பந்ததாரரும் செந்தோசாத் தீவு நிர்வாகமும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.