சேமிப்பு கிடங்கில் உதவியாளர் ஒருவர் கவனக்குறைவாக பளுதூக்கி வாகனத்தை ( forklift ) ஓட்டியதால் 66 வயது ஆடவரின் கால் வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டது.
ஆடவரின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காயமுற்றவரின் உயிர் காப்பாற்றப்பட்டாலும் அவரின் கால் முட்டிக்கு கீழ் உள்ள பகுதி அகற்றப்பட்டது.
இந்நிலையில் லூசியஸ் ரிச்சர்ட் பெரேரா என்னும் அந்த 49 வயது பளுதூக்கி ஓட்டுநருக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லூசியஸ் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
விபத்துச் சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பயணியர் ரோடு அருகே உள்ள சேமிப்புக் கிடங்கில் நடந்தது.
லூசியஸ் வாகனத்தில் பொருளை எடுத்துக்கொண்டு செல்லும்போது அவர் முன் சக ஊழியர்கள் நடந்து சென்றனர். அப்போது வாகனத்தை லூசியஸ் நிறுத்தினார்.
வாகனம் நின்றுகொண்டிருந்த போது அதற்கு பின்பகுதியில் 66 வயது லாரி ஓட்டுநர் இருந்தார். அதை கவனிக்காத லூசியஸ் வாகனத்தை திருப்பினார். அப்போது விபத்து ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக லூசியஸ் பளுதூக்கி வாகனத்தை ஓட்டி வருவதாகவும் விபத்து நடந்தபோது அவரிடம் பளுதூக்கி வாகனத்தை இயக்க உரிமம் இருந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.