தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் வட்டாரப் பாதை மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

2 mins read
71eab3ad-d897-46de-af1a-15efc322f1b0
கட்டப்பட்டுவரும் பாலத்திலிருந்து சாலையில் விழும் உலோகத்துண்டு. - கோப்புப்படம்: சாவ் பாவ்

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி காலையில் ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த மேம்பாலத்திலிருந்து ஓர் உலோகத் துண்டு சாலையில் விழுந்தது.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2 - ஜாலான் பாகார் சந்திப்பில் காலை 9.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அங்கு எந்தப் பணிகளும் இடம்பெறவில்லை. உலோகத் துண்டு விழுந்ததால் எவரும் காயமடையவில்லை, சேதமும் ஏற்படவில்லை,” என்று ஆணையம் தெரிவித்தது.

அத்துடன், சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பின் பொருட்டு அவ்விடத்தில் தற்காலிகமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அது கூறியது.

சம்பவம் தொடர்பான காணொளி எஸ் ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது.

ஜூரோங் வட்டார ரயில் பாதையின் முதன்மை ஒப்பந்ததாரராக சீன ரயில்வே கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்த முன்னிழுவிசையேற்ற (pre-tensioning) உலோகத் துண்டானது, கட்டுமானப் பணியின்போது கான்கிரீட்டிற்கு வலுசேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே, “மேம்பாலம் பாதுகாப்பாக இருப்பதை எங்களுடைய பொறியாளர்கள் சோதித்து உறுதிப்படுத்தினர்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அப்பணியிடத்தில் மேலும் எந்தப் பொருளும் மேலிருந்து விழாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

“இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, ஜூரோங் வட்டாரப் பாதையின் மற்ற பணியிடங்களிலும் முழுமையான சோதனைகளை மேற்கொள்ள முதன்மை ஒப்பந்ததாரருடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்,” என்றும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்