வாஷிங்டன்: ஏழ்மையில் தவிக்கும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி மூன்றாண்டுகளில் $100 பில்லியன் திரட்டும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க நன்கொடை நாடுகள் உத்தரவாதம் அளித்துள்ளன.
தென்கொரியத் தலைநகர் சோலில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற அனைத்துலக மேம்பாட்டுச் சங்கத்தின் (IDA) மாநாட்டில் அந்த அறிவிப்பை உலக வங்கி வெளியிட்டது.
உலகம் முழுவதும் வசதிகுறைந்த 78 நாடுகளுக்கு மானியங்களையும் குறைந்த வட்டியிலான கடன்களையும் அந்தச் சங்கம் வழங்குகிறது.
பணவீக்கம், மோதல்கள், பருவநிலைப் பேரிடர்கள், கடன் சுமை ஆகியவற்றால் தத்தளிக்கும் நாடுகள் அவை.
2028ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் அந்த நாடுகளுக்கு $100 பில்லியன் மதிப்பிலான உதவி மானியங்களையும் கடன்களையும் வழங்க உலக வங்கி உறுதி பூண்டுள்ளது.
அந்த நடவடிக்கைக்குக் கைகோக்க, சங்கத்தில் இடம்பெற்று உள்ள நாடுகள் ஏறக்குறைய $24 பில்லியன் தொகையை நேரடியாக உலக வங்கியிடம் வழங்கும்.
அதன் அடிப்படையில் நிதியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையில் உலக வங்கி இறங்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு சங்கம் அறிவித்த $93 பில்லியன் தொகையைவிட தற்போதைய இலக்கு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், $120 பில்லியன் திரட்டுவதற்கான இவ்வாண்டின் இலக்கைக் காட்டிலும் அது குறைவு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வென்றதைத் தொடர்ந்து டாலர் மதிப்பு வலுவடைந்ததன் காரணமாக, வளரும் நாடுகளின் நாணய மதிப்பு குறைந்தது அதற்கு ஒரு காரணம்.

