உலகக் கிண்ணம் 2026: லினோவோ நிறுவனத்தின் தூதராக ஃபாண்டி அகமது

உலகக் கிண்ணம் 2026: லினோவோ நிறுவனத்தின் தூதராக ஃபாண்டி அகமது

2 mins read
செந்தோசாவில் ஜூலை 18ல் மைக்கல் ஓவனுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி
136d05cc-4030-4f82-b942-75a77cc0a0a1
1994ஆம் ஆண்டின் ‘சிங்கப்பூர் லயன்ஸ்’ காற்பந்து அணியின் கேப்டனாகத் திகழ்ந்த ஃபாண்டி அகமது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காற்பந்து சகாப்தமான ஃபாண்டி அகமது, உலகக் கிண்ணம் 2026 போட்டித் தொடரின் அதிகாரபூர்வ தொழில்நுட்பப் பங்காளரான லினோவோ நிறுவனத்தின் உள்ளூர் விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் சார்ந்து சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்படும் பல பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று லினோவோ நிறுவனம் வியாழக்கிழமை (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதன் ஓர் அங்கமாக செந்தோசாவில் ஜூலை 18ஆம் தேதி இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் பல பருவங்கள் பங்கேற்றுப் புகழ்பெற்ற முன்னாள் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்களின் விளையாட்டாளர் மைக்கல் ஓவன் கலந்துகொள்ளும் காலை உணவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

அவருடன் இணைந்து லினோவோ நிறுவனத் தூதராக 64 வயது ஃபாண்டி அகமதும் கலந்துகொண்டு காற்பந்து ரசிகர்களை மகிழ்விப்பார்.

‘அட்வெஞ்சர் கோவ்’ நீர்விளையாட்டுப் பூங்காவில் காலை 8.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெறும் அந்தக் காலைச் சிற்றுண்டி நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டுகள் தேவைப்படும்.

இம்மாதம் தொடங்கி, உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும்போது தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளில் ஃ பாண்டி இடம்பெறுவார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் பயிற்சி

தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐடிஇ) ஏற்படுத்தப்பட்டுள்ள இளம் காற்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்திலும் அவர் ஓராண்டு காலம் இணைந்து சேவையாற்றுவார். அத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவும் உணர்கருவிகளும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரவர் கனவுகளை எட்டும் வகையில் அதற்கான முயற்சிகளை விரிவாக்கி, விளையாட்டையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ரசிகர்களையும் அடுத்த தலைமுறையின் விளையாட்டாளர்களையும் ஊக்கப்படுத்தும் செயல்பாட்டை தாம் வரவேற்பதாக ஃ பாண்டி லினோவோ வெளியிட்ட அறிக்கையில் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்விளையாட்டுபயிற்றுவிப்பாளர்பல்கலைக்கழகம்