நோயாளிகளுக்குக் கைகொடுக்கும் தலைவர் சிங்கப்பூர்; உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்

2 mins read
6efd3b33-e650-4c88-97a7-99fd5be7eb39
சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகள் ஆற்றியுள்ள கணிசமான பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்று நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். - படம்: சாவ்பாவ்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நோயாளிகளின் சுகாதாரத்துக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க, சமூகத்தில் நடைபெறும் சமூக, உடலுறுதி நடவடிக்கைகளுடன் அவர்களை சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகள் (எஸ்சிஎச்) 2019ஆம் ஆண்டு முதல் இணைக்கும் முயற்சியைத் தொடங்கியது.

இந்நிலையில், சமூகப் பரிந்துரைத்தலுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பு நிலையமாக (World Health Organisation Collaborating Centre for Social Prescribing) உலகிலேயே முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன எஸ்சிஎச்.

இதுகுறித்து இருநாள் ஆசிய பசிபிக் மக்கள்தொகை சுகாதார மாநாடு, ஆசிய பசிபிக் சமூக பரிந்துரைத்தல் மாநாடு நிகழ்வில் நவம்பர் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மனநலம் உட்பட சமூக ரீதியாக ஒரு நோயாளிக்கு ஏற்படும் தேவைகளை நிறைவுசெய்வதற்காக சமூகத்தில் கிடைக்கப்பெறும் பொருத்தமான வளங்களை அந்த நோயாளியுடன் இணைக்கும் பராமரிப்பு மாதிரியே, சமூகப் பரிந்துரைத்தல்.

இதற்கிடையே, இந்தத் துறையில் ஆற்றியுள்ள கணிசமான பணிகளுக்கு அங்கீகாரமாக எஸ்சிஎச் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

குடும்ப மருத்துவர்கள், சமூகப் பராமரிப்பு வழங்குநர்கள், சமூகச் சேவையாளர்கள், தொண்டூழியர்கள் உட்பட பலதரப்பட்ட நிபுணர்களுக்கு ஏற்ப சமூகப் பரிந்துரைத்தல் தொடர்பான பயிற்சித் திட்டங்களை அமல்படுத்த பங்காளிகளுடன் இணைந்து எஸ்சிஎச்சின் கற்றல் அலுவலகம் செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் திரு ஓங். இதனால், சிங்கப்பூரில் பேரளவில் சமூகப் பரிந்துரைத்தலை நடைமுறைப்படுத்தும் ஆதரவு கிட்டியதாக அவர் சுட்டினார்.

சமூகரீதியாக சுகாதார அபாயத்தை எதிர்நோக்கும் நோயாளிகளை அடையாளம் காணும் பயிற்சியை சிங்ஹெல்த்தின் 120 நல்வாழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் எஸ்சிஎச்சில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்