சிங்கப்பூர்மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையே நம் வலிமை: பிரதமர் பெருமிதம்

சிங்கப்பூர்மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையே நம் வலிமை: பிரதமர் பெருமிதம்

2 mins read
5e2929cf-caf0-4fc8-b480-265b8eacba51
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகத்தில் இந்த ஆண்டிற்கான தேசிய தினப் பேரணி உரையாற்றினார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உலகளவில் அரசியல் பதற்றங்களும் பொருளியல் நிச்சயமற்ற தன்மைகளும் அதிகரித்து வரும் சூழலில், சிங்கப்பூரின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது அனைத்துலக சமூகம் நாட்டின் மீது வைத்துள்ள ‘நம்பிக்கை’ தான் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தனது 2026 தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்துள்ளார்.

வல்லரசுகளின் போட்டி, வர்த்தகக் கட்டுப்பாடுகள், அனைத்துலக  மோதல்களால் உலகம் வேகமாக மாறிவருவதை கோடிட்டுக் காட்டிய பிரதமர்,  இத்தகையச் சூழலில் சிங்கப்பூர் உள்நோக்கிச் சுருங்கிவிடக் கூடாது என்றார். மேலும் நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முதன்மை காரணியாக நம்பிக்கையை முன்வைத்தார் பிரதமர் வோங்.

அமெரிக்கா-சீனா இடையிலான தீவிரப் போட்டி, ரஷ்யா-உக்ரேன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியைத் தொடரைப் பாதித்துள்ளதைச் சுட்டிய அவர், இத்தகைய பூசல்கள் வர்த்தகக் கட்டுப்பாடுகளால் உலகப் பொருளியல் பிளவுபட்டு வரும் இக்கட்டான கட்டத்தில் சிங்கப்பூர் நுழைந்துள்ளதாகச் சொன்னார்.

உலகளாவிய அளவில் அமைதியற்ற சூழல் நிலவினாலும், சிங்கப்பூர் தொடர்ந்து நம்பகமான ஒரு வணிக நிதி நடுவமாகத் திகழ்வதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

எதிர்காலத்தை எதிர்கொள்ளும் உத்தி

‘உலக நாடுகள், வர்த்தக நிறுவனங்கள்  முதலீட்டாளர்கள் சிங்கப்பூரை முழுமையாக நம்புகின்றனர். இங்கு சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு, வலுவான நிறுவனங்கள் செயல்படுவதோடு, ஒப்பந்தங்களும் வாக்குறுதிகளும் முறையாக மதிக்கப்படுவதாக உறுதிபடத் தெரிவித்தார் திரு வோங். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், உலக அரங்கில் இருதரப்பு நம்பிக்கை குறைந்துவரும் இந்தக் காலத்தில், சிங்கப்பூரின் நிலையான தன்மை, வெளிப்படைத்தன்மை, அனைத்துலகச் சட்டங்களை மதிக்கும் பண்பு ஆகியவை நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன என்றார்.

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை கொண்டு மட்டும் உலகம் வடிவமைக்கப்படவில்லை என்ற திரு வோங், ஐரோப்பா முக்கியச் சக்தியாக திகழும் வேளையில், இந்தியாவும் விரைவாக உச்சம் தொடுகிறது. மேலும் உலக வர்த்தக அமைப்பில் நாடுகள் பலவும் சந்தை, தொழில்நுட்பம் வளம், ஆகியவற்றிற்குப் போட்டிபோடுகின்றன என்றார் பிரதமர். 

அவ்வகையில், உலகளவில் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக நாடுகள் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்து வருவதாகக் கூறிய அவர், சட்டவிரோத வர்த்தகப் பாதையாக சிங்கப்பூர் பயன்படுத்தப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டின் விதிகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இத்தருணத்தில், முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்தால் அரசு உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார். 

முதன்மைச் சரக்கு பரிமாற்ற மையம் என்ற முறையில், சிங்கப்பூர் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலகக் கூட்டாளிகளுடன் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொன்ன திரு வோங், நாடுகள் தங்களுக்குள் விலகிச் செல்லும் இந்தச் சூழலில், சிங்கப்பூர் உள்நோக்கிச் சுருங்கிவிடாமல் அனைத்துலக அளவிலான தனது பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

புதிய பங்காளித்துவங்களை உருவாக்கி, உலகளாவிய வணிக மையமாகத் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டு, சிங்கப்பூர் மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
தேசிய தினப் பேரணி உரை 2026National Day Rally 2026சிங்கப்பூர்PM WONGலாரன்ஸ் வோங்