விமான இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் 2024ஆம் ஆண்டில் நான்காவது பரபரப்பான அனைத்துலக விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் வந்துள்ளது.
உலகளாவிய பயணத் தரவு வழங்குநரான ‘ஓஏஜி ஏவியேஷன்’ வியாழக்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சாங்கி விமான நிலையம் 2024ல் மொத்தம் 41.5 மில்லியன் அனைத்துலக இருக்கைகளைக் கொண்டிருந்தது.இது 2023ன் 36.1 மில்லியனைவிட 15 விழுக்காடு அதிகம்.
அனைத்துலக விமானங்களின், விமான இருக்கைகள் குறித்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையம் 2023ல் ஐந்தாவது இடத்தில் இருந்தது.
அனைத்துலகப் பயண இருக்கை எண்ணிக்கை அதிகரித்த போதும், கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு முந்திய நிலையை இன்னும் சாங்கி விமான நிலையம் எட்டவில்லை. 2019ல் அந்த எண்ணிக்கை 42.5 மில்லியன் ஆக இருந்தது. 2019ல் உலகின் பரபரப்பான அனைத்துலக விமான நிலையங்கள் பட்டியலில் சாங்கி நான்காவது இடத்தில் இருந்தது.
துபாய் அனைத்துலக விமான நிலையம் 60.2 மில்லியன் இருக்கைகளுடன் 2024ல் உலகின் பரபரப்பான அனைத்துலக விமான நிலையமாக முதல் இடத்தில் வந்துள்ளது.
2019, 2022, 2023ஆம் ஆண்டுகளில் துபாய் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வந்தது. 2020, 2021ஆம் ஆண்டுகளில் இந்தப் பட்டியலை ஓஏஜி வெளியிடவில்லை.
48.4 மில்லியன் இருக்கைகளுடன் இரண்டாவது இடத்தில் லண்டன் ஹீத்ரூ விமான நிலையமும், 41.6 மில்லியன் இருக்கைகளுடன் மூன்றாவது இடத்தில் சோலின் இன்சியான் அனைத்துலக விமான நிலையமும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் 34.6 மில்லியன் இருக்கைகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
2024ல் கோலாலம்பூர் - சிங்கப்பூர் பாதை 5.38 மில்லியன் விமான இருக்கைகளுடன் உலகின் பரபரப்பான விமானப் பயணப் பாதைகளில் நான்காவது இடத்தில் வந்தது. ஹாங்காங் - தைப்பே பாதை, 6.8 மில்லியன் இருக்கைகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.