உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) இரண்டு இடங்கள் இறங்கி 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளை, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) 12வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் இயங்கும் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம், இவ்வாண்டுக்கான பல்கலைக்கழகத் தரவரிசையை வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிட்டது. குறிப்பாக, ஆய்வு, படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கும் சாத்தியம் ஆகிய அம்சங்களைக் கொண்டு ‘கியூஎஸ்’ தரவரிசை பட்டியலிடப்படுகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
தரவரிசையில் என்யுஎஸ் இறக்கம் கண்டிருந்தாலும், ஆசிய அளவில் அது தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.
அத்துடன், உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள ஒரே தென்கிழக்காசிய பல்கலைக்கழகமாக என்யுஎஸ் திகழ்கிறது.
முதன்முதலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஆசியப் பல்கலைக்கழகம் என்ற பெருமையும் அதற்கு உண்டு.
சிங்கப்பூரைத் தவிர பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. 23வது முறையாக இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
106 நாடுகள், பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 1,500 பல்கலைக்கழகங்கள் ஆராயப்பட்டு, அவை தரவரிசைப்படுத்தப்பட்டன.
சிங்கப்பூரின் மற்ற பல்கலைக்கழகங்கள்
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு), சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) ஆகியவையும் கியூஎஸ் பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. அவை இரண்டும் முதல் 500 இடங்களுக்குள் உள்ளன.
எஸ்யுடிடி 253 இடங்கள் முன்னேறி 266வது இடத்தைப் பிடித்தது. இவ்வாண்டு ஆகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ள பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
எஸ்எம்யு, 100 இடங்கள் முன்னேறி 411வது இடத்தைப் பிடித்தது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளது அப்பல்கலைக்கழகம்.
முதல் ஐந்து இடங்கள்
அமெரிக்காவின் மேசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் தொடர்ந்து 15வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது.
ஸ்டேன்ஃபர்ட் பல்கலைக்கழகம், பிரிட்டனின் இம்பீரியல் காலேஜ் லண்டன் ஆகிய இரண்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.
ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.

