இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், தீயில் கருகிய நிலையில் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் அமைந்துள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இலக்கிய நூல்களும் தலைக்கவசங்களும் அடங்கும்.
1945ஆம் ஆண்டில் தோல்வியின் விளிம்பில் இருந்த ஜப்பானியப் படைகள் சரணடைவதற்கு முன்பு அவ்விடத்தில் குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் இலக்கிய நூல்களையும் இதர பொருள்களையும் எறிந்து தீவைத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அலெக்சாண்டிரா மருத்துவமனை இருக்கும் இடத்தில் 2021ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்றது.
அப்போது அங்கு தீயில் கருகி இலக்கிய நூல்களுடன் டைனிப்போன் பீர் புட்டிகளின் கண்ணாடித் துண்டுகளும் வயிற்றுப்போக்குக்கான மாத்திரைகள் என நம்பப்படும் மருந்தும் கண்டெடுக்கப்பட்டன.
அலெக்சாண்டிரா மருத்துவமனை தற்போது மறுசீரமைக்கப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட இப்பொருள்களைப் புதிய மரபுடைமைக் காட்சிக்கூடத்தில் காட்சிக்கு வைக்க அது திட்டமிட்டுள்ளது.
அத்துடன், பழைய கட்டடத்தின் சன்னல்கள், கதவுச் சட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாத்துப் புதிய கட்டடத்திலும் அவற்றைப் பயன்படுத்த இருப்பதாக அலெக்சாண்டிரா மருத்துவமனை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
புதிய கட்டடங்கள் 2028ஆம் ஆண்டிலிருந்து இயங்கும்.
புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் அலெக்சாண்டிரா மருத்துவமனை அமைந்துள்ள இடத்தின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 13 ஹெக்டராக இருக்கும்.
அலெக்சாண்டிரா மருத்துவமனையின் மறுசீரமைப்புப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.
அதற்கு முன்பு, 2021ஆம் ஆண்டில் அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியை நடத்த தேசிய மரபுடைமைக் கழகம் உத்தரவிட்டது.
பல ஆண்டுகள் பழமைவாயந்த பொருள்களை 2023ஆம் ஆண்டில் ஒப்பந்ததாரர்கள் அங்கு கண்டெடுத்தனர்.
அவற்றில் பிரிட்டிஷ், ஜப்பானியத் தலைக்கவசங்களும் இரண்டு ஜப்பானியத் தண்ணீர் புட்டிகளும் அடங்கும்.
அலெக்சாண்டிரா மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 1938ஆம் ஆண்டில் தொடங்கின.
அப்போது அது பிரிட்டிஷ் ராணுவ மருத்துவமனை என அழைக்கப்பட்டது.

