வேலைத்திறன் தொடர்பான ‘வோர்ல்டுஸ்கில்ஸ்’ (WorldSkills) எனப்படும் உலகத்திறன் போட்டிகள், சிங்கப்பூரின் பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் பாடத்திட்டங்களை மேம்படுத்த உதவியிருப்பதாக வெளியுறவு, கல்வி இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் கூறியுள்ளார்.
இத்தகைய அனைத்துலக நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் அதன் மாணவர்களை வெளிநாட்டு மாணவர்களோடு ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கான அளவுகோலாக விளங்குவது மட்டுமன்றி, குடியரசின் பாடத்திட்டங்களையும் உலகளாவிய நிலையில் தேவைப்படும் வேறுபட்ட திறன்கள், பண்புகளையும் ஒப்பிட்டு மதிப்பிடவும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலின்போது டாக்டர் மாலிக்கி இவ்வாறு கூறினார்.
எடுத்துக்காட்டாக, இயந்திர மின்னணுவியல், இணையப் பாதுகாப்பு, எந்திரனியல் துறை மாணவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் கடந்த ஆண்டுகளில் உலகத்திறன் போட்டிகளில் கற்றுக்கொண்ட புதிய கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் தங்கள் பாடத்திட்டங்களில் புகுத்தியுள்ளனர் என்றார் அவர்.
செப்டம்பர் 14ஆம் தேதி ஃபிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற 47வது உலகத்திறன் போட்டிகளில் உரையாற்றிய டாக்டர் மாலிக்கி, சிங்கப்பூர் இப்போட்டிகளின் மூலம் போட்டி அனுபவத்துக்கு அப்பால் கூடுதல் லாபம் பெறுவதாகக் கூறினார். மற்ற நாடுகளின் அனுபவங்களிலிருந்து அது கற்றுக்கொள்ள இயலும் என்பதை அவர் சுட்டினார்.
“இயந்திர மின்னணுவியலும் தகவல் தொழில்நுட்பமும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகின்றன. எங்கள் நிலையை அறிந்துகொள்ள உதவும் அளவுகோலாக இத்தகைய நிகழ்ச்சி அமைகிறது.
“உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று வாய்ப்புகளை அடையாளம் காண எங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும்போது அவர்கள் உலகளாவிய தயார்நிலையைப் பெறுகிறார்கள்,” என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.
இளையர்களுக்கான ‘வோர்ல்ட்ஸ்கில்ஸ்’ போட்டி ‘வேலைத்திறன்களுக்கான ஒலிம்பிக் போட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கலை, கட்டுமான, கட்டடத் தொழில்நுட்பம், தகவல், தொடர்புத் தொழில்நுட்பம், போக்குவரத்து, தளவாடம் போன்ற பிரிவுகளில் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த இது வழிவகுக்கிறது.
1995ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர்ப் போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு 35 பேர் கொண்ட குழு இதில் கலந்துகொண்டது. செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் 30 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர்க் குழு, இரண்டு தங்கப் பதக்கங்கள், நான்கு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் உன்னதத் திறனுக்கான 11 பதக்கங்களையும் பெற்றது.
சில்லறை விற்பனைக்கு வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொருள்களைக் காட்சிப்படுத்தும் (Visual merchandising) பிரிவில் சிங்கப்பூர் முதல்முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. உணவகச் சேவைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இப்பிரிவில் சிங்கப்பூர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

