தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பிரித்தம் சிங்கின் வழக்கறிஞருக்கு மருத்துவ விடுப்பு

வழக்கு விசாரணை அக்டோபர் 22ல் நிறுத்திவைப்பு

2 mins read
2e0124ea-70a3-4f4f-94dc-65157b84487c
வழக்கறிஞர் அரிஸ்டாட்டல் இமானுவெல்லுடன் (வலது) பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் நீதிமன்றத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) வெளியேறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கில் தற்காப்பு வழக்கறிஞரான ஆன்ட்ரே ஜுமாபோய்க்கு உடல்நலம் சரியில்லை என அவரது குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டல் இமானுவெல் இங் தெரிவித்துள்ளார்.

திரு ஜுமாபோய் மருத்துவரைப் பார்த்த பிறகு அவரால் இரண்டு நாள்களுக்கு நீதிமன்றம் செல்ல முடியாது எனக் குறிப்பிடும் மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அரசு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை பிற்பகல் வரை விசாரணையை நிறுத்தி வைக்கும்படி தற்காப்புத் தரப்பு கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழு, திரு ஜுமாபோய் விரைவில் குணமடையும்படி வாழ்த்தியது.

நீதிமன்ற விசாரணை புதன்கிழமை (அக்டோபர் 23) தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ல் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவினர் முன்னிலையில் திரு சிங், இரண்டு முறை பொய்யுரைத்ததாக அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பாலியல் வதையால் பாதிக்கப்பட்டவர் ஒருவருடன் காவல் நிலையத்துச் சென்றதாகவும் அவர் அங்கு தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்திருந்தார்.

இதன் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் திரு சிங் பொய்யுரைத்ததாக அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யுதிஷ்த்ரா நாதனை தற்காப்புத் தரப்பு திங்கட்கிழமை விசாரித்தது.

2021 அக்டோபர் 12ஆம் தேதி கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பில், திருவாட்டி கான் உண்மையைச் சொல்வதற்கான சரியான திட்டத்தை அத்தலைவர்கள் அமைக்கவில்லை எனத் திரு நாதன் கவலைப்பட்டதாகத் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் நிலைமை அப்படி இருக்க, திருவாட்டி கான் விடாமல் மேலும் பொய் சொல்லவேண்டும் என்பது தமது நிலைப்பாடாக இருந்ததை திரு நாதன் ஒப்புக்கொண்டார்.

திரு நாதன் நீக்கிய குறுஞ்செய்திகள், நீதிமன்ற விசாரணையுடன் தொடர்புடையதா, அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசுத் தரப்பினரும் தற்காப்புத் தரப்பினரும் தங்களுக்குள் திங்கட்கிழமையின்போது வாதிட்டனர்.

2021 அக்டோபர் 4 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை பதிவுசெய்யப்பட்ட திரு நாதனின் திருத்தப்படாத குறுஞ்செய்திகளின் தொகுப்பை திரு ஜுமாபோய் நீதிபதியிடம் கேட்டிருந்தார்.

இதற்கான நோக்கம், திரு நாதனும் திருவாட்டி லோவும் நம்பகமான சாட்சிகளா என்ற கேள்வியுடன் தொடர்புடையது என்று திரு ஜுமாபோய் கூறினார்.

இதுகுறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், திரு நாதனின் ஆதாரங்களையும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் கொடுக்கப்பட்ட பத்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி லியூக் டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்