பொங்கோலில் பாட்டாளிக் கட்சி வென்றிருந்தால் அது தவறான செய்தியை உலகிற்கு உரைத்திருக்கும்: வோங்

2 mins read
5e1e3823-8e12-4404-8aac-707b39bdfdf7
தற்காப்பு துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ, மசெக தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங், தொழிற்சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பொங்கோல் குழுத்தொகுதியைப் பாட்டாளிக் கட்சி கைவசப்படுத்தியிருந்தால் அது தவறான செய்தியை உலகிற்கு உரைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளார் லாரன்ஸ் வோங்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற அக்கட்சியின் மாநாடு மற்றும் விருது விழா 2025ல் அவர் உரையாற்றினார். அண்மைய தேர்தல் மிகவும் கடினமாக அமைந்ததாக அவர் கூறினார்.

குறிப்பாகப் பொங்கோல், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் மசெகவிற்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு மிக்க நன்றி என்றார் பிரதமர் வோங்.

அவ்விரு குழுத்தொகுதிகளையும் இழந்திருந்தால் அந்தத் தோல்வி கடுமையான, ஆழமான தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்த்திருக்கும் என்றார் அவர்.

‘‘தெம்பனிஸ் குழுத்தொகுதியை மசெக இழந்திருந்தால், மலாய்-முஸ்லிம் வாக்காளர்களை ஈர்க்க பாட்டாளிக் கட்சி கணித்துப் பயன்படுத்தியது சக்திவாய்ந்த உத்தி என்ற எண்ணத்தை அது அளித்திருக்கும்.

‘‘மேலும் அது மற்ற அரசியல் கட்சிகளையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்திருக்கும். அது நம் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பதுடன் பிளவுபட்ட சிங்கப்பூருக்கும் வழிவகுக்கும்,’’ என்று திரு வோங் விவரித்தார்.

பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு கட்சியின் தலைமைச் செயலாளராக அவர் பங்கேற்கும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘‘பொங்கோல் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சியின்வசம் சென்றிருந்தால், அது துணைப் பிரதமர் கான் கிம் யோங் போன்ற அனுபவம் வாய்ந்த அமைச்சரின் நிரூபிக்கப்பட்ட திறன்கள் மற்றும் நிலையான தலைமைத்துவத்தைப் பற்றி வாக்காளர்கள் அக்கறைகொள்ளவில்லை என்ற தவறான செய்தியைக் கூறியிருக்கும்,” என்ற பிரதமர், “அதன்மூலம் மிகவும் திறமைவாய்ந்த, பணிக்குழு மனிதரை நாம் இழந்திருப்போம்,’’ என்றார்.

பொதுத் தேர்தலில் மக்கள் மசெகவிற்கு அளித்துள்ள வலுவான ஆதரவு உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியதாக அவர் சொன்னார்.

மேலும், இது சிங்கப்பூரர்கள் தேர்தல்களைத் தீவிரமாக நோக்குவதாகவும், தங்கள் வாக்குகளின் தாக்கம் தேர்தல் முடிவுகள் நாட்டின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என அறிந்திருப்பதைப் பிரதிபலிப்பதாகவும் சொன்னார்.

மசெகவிற்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றி, வாக்குகளை அள்ளும் நோக்கில் மக்களைத் தூண்டும் விதத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அல்லது இனவாத அரசியலால் சிங்கப்பூரர்கள் அசைக்கப்படுவதில்லை என்ற செய்தியையும் நல்கியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தம் மீதும் தம் குழுவினர் மீதும் நம்பிக்கை வைக்க மக்கள் முடிவு செய்தனர் என்றும் அதைக் கௌரவிக்கும் வகையில் தாம் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைப்பதாகவும் அவர் கூறினார்.  

‘‘இப்போது மக்கள் அளித்துள்ள இந்தப் பேராதரவு நாளையே விரைவாக மீட்டுக்கொள்ளப்படலாம். மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கையை மெத்தனமாகக் கருதவில்லை,’’ என்றார் அவர். 

மாநாட்டில் திரண்டிருந்த கட்சியினர் ஏறத்தாழ 1,800 பேர் முன்னிலையில் உரையாற்றிய திரு வோங், அண்மைய பொதுத் தேர்தலில் அல்ஜுனிட், ஹவ்காங், செங்காங் உள்ளிட்ட எதிர்கட்சித் தொகுதிகளில் போட்டியிட்ட மசெக வேட்பாளர்களைப் பாராட்டினார்.

அவர்களின் இலக்கு கடுமையான ஒன்றாக இருந்தாலும் துணிவுடனும் நோக்கத்துடனும் உளமார சேவை செய்வது எப்படி என்பதை அனைவருக்கும் அவர்கள் வெளிப்படுத்தியதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்