வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தில் சிங்கப்பூர் சென்ற ஆண்டு கண்ட முன்னேற்றம், 2024ன் முற்பாதியிலும் தொடர்ந்ததாக மனிதவள அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்தது.
கொவிட்-19 பெருந்தொற்று பரவிய 2020ஆம் ஆண்டைத் தவிர்த்து, சென்ற ஆண்டு வேலையிட மரண விகிதம் சிங்கப்பூர் வரலாற்றிலேயே ஆகக் குறைவாக, 100,000 ஊழியர்களுக்கு 0.99 (மொத்தம் 36 மரணங்கள்) என இருந்தது.
அந்த விகிதம் 2024ன் முற்பாதியில் 1.0 (19 மரணங்கள்) எனச் சற்றே உயர்ந்துள்ளது.
எனினும், 2023க்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் (2020ஐ தவிர்த்து) இவ்விகிதம் குறைவு. இவ்விகிதம் 2022ல் 1.3, 2019, 2021ஆம் ஆண்டுகளில் 1.1 என்றிருந்தது
2028ஆம் ஆண்டிற்குள் அதனை 1.0க்கும் கீழாகக் குறைக்கும் நோக்குடன் சிங்கப்பூர் தொடர்ந்து நடைபோடுவதாக மனிதவள அமைச்சு கூறியது.
“வரும் 2028ஆம் ஆண்டுக்குள் வேலையிட மரணத்தை 100,000 ஊழியர்களுக்கு 1.0க்குக் கீழ் குறைப்பதே சிங்கப்பூரின் இலக்கு. குறிக்கோளை அடைவது மட்டும் முக்கியமன்று. அதனைத் தக்கவைக்கவும் வேண்டும்,” என்று மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
எச்எச் ஸ்டெயன்லெஸ்’ நிறுவனத்திற்கு வருகை மேற்கொண்ட திரு ஸாக்கி முகம்மது வேலையிடப் பாதுகாப்பில் அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சிங்கப்பூர் தக்கவைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அபாயமிக்க துறைகளில் அதிக மரணங்கள் பதிவு
இவ்வாண்டு முற்பாதியில் ஏற்பட்ட 19 வேலையிட மரணங்களில் 12, கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, சேமிப்பு, கடல்சார் ஆகிய துறைகளில் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆக அதிகமாக, எட்டு மரணங்கள் வாகன விபத்துகளால் நேர்ந்தன. உயரத்திலிருந்து விழுந்தது (மூன்று மரணங்கள்), கட்டமைப்புகள் இடிந்து விழுந்தது/இயந்திரங்கள் பழுதடைந்தது (இரு மரணங்கள்), அபாயமிக்க வேதிப்பொருள்களை நுகர்தல் (இரு மரணங்கள்) போன்றவையும் வேலையிட மரணங்களுக்குக் காரணமாக அமைந்தன.
விபத்துகளால் பலத்த காயங்களுக்கு உள்ளானோர் ஆண்டு விகிதம் 0.1 குறைவு
வேலையிட விபத்துகளால் எலும்பு முறிவு, உடலுறுப்புத் துண்டிப்பு, பக்கவாதம், பார்வையிழத்தல் போன்ற கடுமையான காயங்களுக்கு (major injury) ஆளானவர்களின் விகிதம் சென்ற ஆண்டு 100,000 ஊழியர்களுக்கு 16.1 (மொத்தம் 490 பேர்) என இருந்தது. 2024ன் முற்பாதியில் அது 16.0 (மொத்தம் 293 பேர்) எனக் குறைந்தது.
தொழில்சார் நோய்கள்
மருத்துவர்கள், முதலாளிகளிடத்தில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தொழில்சார் நோய்களின் (Occupational diseases) விகிதம் 2026 வரை உயர்வாக நீடிக்கும் என மனிதவள அமைச்சு கணிக்கிறது.
2024 முதற்பாதியில் 100,000 ஊழியர்களுக்கு 25.9 என்ற விகிதத்தில் 473 தொழில்சார் நோய்கள் பதிவுசெய்யப்பட்டன.
2021ல் மேம்பட்ட வேலையிட சுகாதாரக் கண்காணிப்புத் திட்டத்தை மனிதவள அமைச்சு தொடங்கியது. அதனால், இரைச்சலால் காதுகேளாமல் போன பாதிப்பு அதிகமாகப் பதிவானது.
வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த உத்திகள்
2024 முதற்பாதியில் பல துறைகளிலும் 3,000க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டதாகவும் தடுக்கி விழுதல், இயந்திரப் பாதுகாப்பு, உயரத்திலிருந்து விழுவது போன்ற முக்கிய அம்சங்களைக் கூடுதலாகக் கண்காணித்ததாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
7,000க்கும் மேற்பட்ட விதிமீறல்களுக்கு 22 வேலை நிறுத்த உத்தரவுகள், 1.4 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட 717 அபராதங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு எடுத்தது.
தம் தரவுகள் மூலம் அதிக அபாயத்தில் இருக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கூடுதலாக மேற்பார்வையிடுவதாகவும் அமைச்சு கூறியது.
2023 அக்டோபர் முதல் கட்டுமானத்திலிருந்து உற்பத்தித் துறைக்கும் தண்டனைப் புள்ளி முறையை (Demerit Point System) விரிவாக்கியதையடுத்து, உலோக உற்பத்தியில் மேற்கொண்ட கூடுதல் கண்காணிப்பு, அத்துறையில் மிகுந்த மேம்பாட்டைக் கொண்டுவந்ததாக அமைச்சு சுட்டியது.
உலோக உற்பத்தியில், 2023 முற்பாதியோடு ஒப்பிடுகையில், 2024 முற்பாதியில் மரண அல்லது கடும் காயங்களுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 45 விழுக்காடு குறைந்தது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரங்களை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்த ‘மாஸ்ட்’ எனும் அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பணிக்குழு, 2024 முற்பாதியில் கூடுதலான ‘சேஃப்’ உத்திகளை அறிமுகப்படுத்தியது.
பொதுத் துறைக் கட்டுமானத் திட்டங்களுக்குக் கூடுதல் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கட்டுப்பாடுகள் (2024 ஏப்ரல் முதல்), 5 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தங்களுக்குப் பணியிடங்களில் அத்தியாவசிய காணொளி மேற்பார்வைக் கருவிகள் (2024 ஜூன் முதல்) போன்றவை அவற்றில் அடங்கும்.
எனினும், கட்டுமான, கடல்சார் துறைகளில் அண்மையில் நிகழ்ந்த வேலையிட மரணங்களைக் கருத்தில்கொண்டு, வேலையிடப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருமாறு அமைச்சு முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் நினைவூட்டியுள்ளது.