தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே வாரத்துக்குள் சிங்கப்பூரில் இரண்டாம் நச்சுணவு சம்பவம்:60 பேர் பாதிப்பு

2 mins read
2c5c7a3d-5020-4f5f-a6c3-7e09d56aa1c1
ஒன் ராபிள்ஸ் கீ கட்டடம் அருகில் தற்காலிக அவசர முதலுதவி மையம் ஏற்படுத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிக் டாக் செயலியின் தலைமை அலுவலகமான பிட்டான்ஸில் ஏற்பட்ட உணவு நச்சு சம்பவத்தைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜுலை 30) குறைந்தது 60 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

ஒன் ராபிள்ஸ் கீ முகவரியிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு பல அழைப்புகள் வந்ததாக குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது.  மொத்தம் 17 மருத்துவ உதவி வாகனங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

சிங்கப்பூர் உணவு  அமைப்பும் சுகாதார அமைச்சும் பிட்டான்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நச்சுணவு சம்பந்தப்பட்ட இரைப்பை குடல் அழற்சி சம்பவங்களை விசாரித்து வருவதாக  அறிவித்துள்ளன.

ஜுலை 30 நிலவரப்படி, நச்சுணவால் பாதிப்படைந்த 60 பேரில், 57 பேர் மருத்துவமனைகளில் உதவி நாடியிருப்பதாக கூட்டறிக்கையில் அவை தெரிவித்தன. 

வயிற்று வலி, வாந்தி போன்றவற்றால் அவதியுற்றோர், சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டொக் செங் மருத்துவமனை, ராபிள்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் ஒரே விநியோகிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட உணவை உட்கொண்டிருந்தனர் என்று அறியப்படுகிறது. 

குடிமை தற்காப்புப் படை தற்காலிக அவசர முதலுதவி மையத்தை ஒன் ராபிள்ஸ் கீ கட்டடம் அருகில் ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்தது. 

“ஊழியர்களின் நலனை மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம். அவசர உதவி அமைப்புகளுடன் இணைந்து பாதிப்படைந்துள்ள ஊழியர்களுக்கு  தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,”  என்று பைட்டான்ஸ் நிறுவன பேச்சாளர் ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

விசாரணை நடந்து வருவதாகவும் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

உரிமம் பெற்ற உணவு விநியோகிப்பாளர்களை அலுவலகத்தில் சேவை வழங்க பைட்டான்ஸ் அனுமதி வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. 

உணவுப் பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு. சிங்கப்பூர் உணவு அமைப்பு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதேநேரத்தில், ​​​உணவு நிர்வாகிகளும் முறையான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் வழி தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் தெரிவித்தன.

கடந்த வாரம் (ஜுலை 23, 24), ஜாலான் பஹாரில் உள்ள குடிமைத் தற்காப்புப் படையின் பயிற்சி முகாமில் 165 பேர் நச்சுணவால் பதிப்படைந்தனர்.

குறிப்புச் சொற்கள்