சீனத் திறன்பேசி, தொழில்நுட்ப நிறுவனமான ‘சியாவ்மி’ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் குறைந்தது மேலும் இரண்டு கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருக்கும் ‘சியாவ்மி’ கடைகளின் மொத்த எண்ணிக்கை பத்தாக அதிகரிக்கும்.
சிங்கப்பூரின் ஃபூனான் கடைத்தொகுதியில், இங்கு ‘சியாவ்மி’ நேரடியாக நிர்வகிக்கும் அதன் முதல் கடையின் திறப்புவிழாவில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“தென்கிழக்காசியச் சந்தைகளுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதி இது,” என்று செய்தி அறிக்கை ஒன்றில் ‘சியாவ்மி’ கூறியது.
சிங்கப்பூரில் விநியோகப் பங்காளிகள் நடத்தும் ஏழு ‘சியாவ்மி’ கடைகள் தற்போது உள்ளன.
‘சியாவ்மி’ சில கடைகளைச் சொந்தமாக நிர்வகிக்க விரும்புவதாக ‘சியாவ்மி தென்கிழக்காசியா’வின் பொது நிர்வாகி அலெக்ஸ் டாங் கூறினார். ‘சியாவ்மி’க்கும் அதன் பங்காளிகளுக்கும் இடையிலான இணைப்பு குறைவாக இருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
அதிகப் பொருள்களை வழங்குவது, சீனாவில் பயன்படுத்தப்படும் மேலும் செயல்திறன்மிக்க முறையை அறிமுகப்படுத்துவது, கடையின் தோற்றத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மற்ற கடைகளில் பயனீட்டாளர் அனுபவத்தை மேம்படுத்த ‘சியாவ்மி’ விரும்புகிறது.
“’சியாவ்மி’ பொருள்களில் ஆர்வம் அதிகரித்திருப்பதால், சிங்கப்பூர் சந்தை குறித்து நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது,” என்று திரு டாங் கூறினார்.

