சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்.
ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நெரிசல் ஏற்படும் எனக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
நவம்பர் 20 முதல் 2027 ஜனவரி 3 வரை நிலவழி எல்லைகளைப் பயன்படுத்துவோர், கூடுதல் காத்திருப்பு நேரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். குறிப்பாக, வார இறுதி நாள்களில் நெரிசல் அதிகமாக இருக்கும்.
பயணிகள் எல்லை தாண்டிய பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
பயணிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி சரியான தடங்களில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீபாவளி நீண்ட வார இறுதி விடுமுறையின்போது (நவம்பர் 6 முதல் 9, 2026 வரை), உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக 2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கடந்து சென்றனர்.
நவம்பர் 6ஆம் தேதி பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் 553,000க்கும் மேற்பட்ட பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக குடிநுழைவுச் சோதனையைக் கடந்துள்ளனர்.
பயணத்தைத் தொடங்கும் முன், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டரிங் இணையத்தளம் வழியாகப் போக்குவரத்து நிலவரத்தை ஓட்டுநர்கள் சரிபார்க்கலாம்.
மேலும், விரைவான அனுமதிக்கு, கார், மோட்டார்சைக்கிள் பயணிகள் கடப்பிதழ்களுக்குப் பதிலாக கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
