2026ஆம் ஆண்டுக்கான கோடைப் பருவத்தின் எஞ்சிய காலத்தில் வெப்ப அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெப்ப அலைக்கான அபாயம் குறித்து நாடாளுமன்றத்தில் ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்குப் புதன்கிழமை (மே 6) பதிலளித்தபோது டாக்டர் புதுச்சேரி மேற்குறிப்பிட்டவாறு கூறினார்.
ஊடக அறிக்கைகளின்படி, மலேசியாவில் பெர்லிஸ், பேராக், கெடா போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இவ்வாரத் தொடக்கத்தில் வெப்பக் குறியீடு 52 டிகிரி செல்சியசைத் தாண்டிப் பதிவாகியது.
சிங்கப்பூரின் அனைத்து வானிலை நிலையங்களிலும் தொடர்ந்து மூன்று நாள்களுக்குத் தினசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது சிங்கப்பூரில் வெப்ப அலை நிலவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது என மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை உள்ளிட்ட வானிலை நிலவரங்கள் குறித்து இரு வாரங்களுக்கு ஒருமுறை அறிக்கை ஒன்றையும் நான்கு நாள்களுக்கான முன்னறிவிப்புகளையும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் வெளியிடுகிறது என்றார் அவர்.
“எல் நினோ போன்ற வானிலை நிகழ்வுகளை ஆய்வு நிலையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டால், வானிலை சார்ந்த துறைகள் உட்பட பிறருக்கு ஆலோசனைகளை வழங்க வெப்பத் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘மெர்குரி’ பணிக்குழுவுடன் இணைந்து அது செயல்படுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

