கல்வி அமைச்சு அறிமுகம் செய்த பாட அடிப்படையிலான வகைப்பாடு (Subject Based Banding), 120 உயர்நிலைப் பள்ளிகளில் ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.
இம்முறையில், மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் அவர்களது திறனுக்கேற்ப மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர்.
மேலும், மாணவர்கள் பெறும் அடைவுநிலையைப் பொறுத்து அவர்கள் உயர்நிலைப் பாடங்களைத் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்குப் பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாசிர் ரிஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி ஷெத் ஜியா சத்யம், 12, உயர்நிலை ஒன்று நியமனக் குழு 3ல் கணக்குப் பாடத்தைத் தற்போது படித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், அறிவியல், தாய்மொழிப் பாடங்களையும் நியமனக் குழு 3ல் அவர் பயின்றுவருகிறார்.
நியமனக் குழு 3 பாடங்கள் அனைத்தும் உயர் தேவையுள்ள பாடங்கள் ஆகும். அத்துடன், உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடங்கள் இருப்பதால் சில நேரம் சமாளிப்பது சிரமமாக இருப்பதாகக் கூறினார் ஜியா.
“ஆசிரியர்கள் அளிக்கும் ஊக்கமும் அன்பும் எனக்குப் பேருதவியாக இருப்பதால் புதிய பாடங்களைக் கற்று, அவற்றில் தேர்ச்சி பெற எனக்கு ஆவலாக உள்ளது,” என்றார் ஜியா.
பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டம் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கி வரும் விரைவுநிலை, வழக்கநிலைப் பிரிவுகளுக்குப் பதிலாக இந்தப் புதிய திட்டம் 2024ஆம் ஆண்டிலிருந்து எல்லா உயர்நிலைப்பள்ளிகளிலும் நடப்புக்கு வரும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது.
இந்தத் திட்டம், பாசிர் ரிஸ் உயர்நிலைப் பள்ளி உட்பட முன்னோட்டமாக 28 உயர்நிலைப் பள்ளிகளில் 2020ஆம் ஆண்டு தொடங்கியது. வெவ்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை ஒரே வகுப்பில் ஒருங்கிணைக்கப் புதிய வழிகளை இந்தக் திட்டம் ஆராய்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, 24 பள்ளிகளில் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டம் நடைப்பெற்று வருகிறது.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ் தற்போது 120 பள்ளிகள் இயங்கி வருவதால் விரைவுநிலை, வழக்கநிலைப் பிரிவுகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாது என்றார் பாசிர் ரிஸ் உயர்நிலைப் பள்ளி முதல்வர் கிரேஸ் சுவா.
“எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று அடையாளம் கண்டு உறுதிசெய்ய இந்தப் பாட அடிப்படையிலான வகைப்பாடு உதவுகிறது,” என்றார் திருமதி சுவா.
மேலும், பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ் பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த கல்வி உதவியையும் அளிக்க ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறினார் திருமதி சுவா.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பிரிவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற கற்பித்தலைப் பின்பற்ற இயலும்.
சிரமப்படும் மாணவர்கள் குறைந்த தேவையுள்ள பாடங்களைத் தேர்வு செய்யலாம். அதேநேரம், நன்றாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர் தேவையுள்ள பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2027ஆம் ஆண்டு முதல் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண (ஜிசிஇ ‘ஓ’ நிலை) மற்றும் வழக்க நிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுகளுக்குப் பதிலாக உயர்நிலை 4, 5ஆம் நிலை மாணவர்கள் ‘சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் உயர்நிலைக் கல்விச் சான்றிதழ்’ (Singapore-Cambridge Secondary Education Certificate) தேர்வுகளை எழுதுவர்.
தற்போது புவியியல் பாடம் தன்னை மிகவும் ஈர்ப்பதாகத் தெரிவித்தார் ஜியா.
“உயர்நிலைக் கல்வி முடிந்ததும் வணிகம் சார்ந்த உயர்கல்வி பயில விரும்புகிறேன்,” என்றார் அவர்.