முன்னாள் குற்றவாளிகளுக்கு நிலைத்தன்மையையும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழியையும் வழங்குவதில் வேலைவாய்ப்பு மிக முக்கியமானது என்று சட்ட அமைச்சரும் இரண்டாவது உள்துறை அமைச்சருமான எட்வின் டோங் கூறியுள்ளார்.
“முன்னாள் குற்றவாளிகள் வெற்றிகரமாக சமூகத்துடன் மீண்டும் இணைவதில் நிலையான வேலைவாய்ப்பு ஒரு முக்கியமான, இன்றியமையாத பங்கை வகிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று சனிக்கிழமை (நவம்பர் 14) சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற மஞ்சள் நாடா சமூகத் திட்ட விருதுகள், பாராட்டு நிகழ்ச்சியில் திரு டோங் பேசினார்.
அனைவரையும் உள்ளடக்கிய பணியமர்த்தலை ஏற்றுக்கொள்ளுமாறு மேலும் பல முதலாளிகளிடம் வலியுறுத்திய அவர், “முதலாளிகள் தங்கள் கதவுகளைத் திறக்கும்போது முன்னாள் குற்றவாளிகள் இரண்டாவது வாய்ப்பைப் பெறுகின்றனர். அது அத்தகையோரின் குடும்பத்தினருக்கும் நம்பிக்கை ஒளியாகும்,” என்றார்.
கடந்த ஆண்டு நிலவரப்படி, கிட்டத்தட்ட 6,500 முதலாளிகள் மஞ்சள் நாடா அமைப்பில் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், தகுதியுள்ள முதலாளிகளுக்கு முதல் ஒன்பது மாத வேலைவாய்ப்பிற்கான ஊதியத்தில் 20 விழுக்காடு வரை ஊதிய ஆதரவை வழங்கும் ‘உயர்த்துதல் வேலைவாய்ப்புக் கடன்’ திட்டத்தை அரசாங்கம் வழங்குகிறது.
கடந்த ஆண்டில், ஏறக்குறைய 2,600 முன்னாள் குற்றவாளிகளைப் பணியமர்த்துவதற்காகக் கிட்டத்தட்ட 1,000 முதலாளிகள் அத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். 2028ஆம் ஆண்டுவரை அந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் திரு டோங் தெரிவித்தார்.
20 அடித்தளப் பிரிவுகளைச் சேர்ந்த விருந்தினர்களும் தன்னார்வலர்களும் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறைவாசத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்கள் செலவிட்ட நேரத்திற்காகவும் வளர்த்துக்கொண்ட உறவுகளுக்காகவும் 236 தன்னார்வலர்கள் நீண்டகாலச் சேவை விருதுகளைப் பெற்றனர்.
2010ஆம் ஆண்டிலிருந்து, மஞ்சள் நாடா சமூகத் திட்டம் 93 பிரிவுகளில் 1,100 தன்னார்வலர்களைத் திரட்டி, 29,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
