‘ஈசூன் 10’ வர்த்தக, குடியிருப்புக் கட்டடமாக மாறுகிறது

‘ஈசூன் 10’ வர்த்தக, குடியிருப்புக் கட்டடமாக மாறுகிறது

2 mins read
5f2e9a92-420f-4a22-96ba-601cc8ab4092
ஆஸ்திரேலியரான ஜியோஃப் மலோன் கட்டடத்தை வடிவமைத்தார். - படம்: கோல்டன் வில்லேஜ் மல்டிபிளக்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முதல் திரையரங்க நிலையமான ‘ஈசூன் 10’ கட்டடம் ஒட்டுமொத்தமாக உருமாறவிருக்கிறது.

அந்த இடத்தை குடியிருப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் போவதாக நகரச் சீரமைப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இது பற்றிய விவரங்களை மே 8ஆம் தேதி ஆணையம் வெளியிட்டது.

ஆரம்பத்தில் அந்தக் கட்டடம் இருக்கும் நிலப்பகுதியை வர்த்தக வட்டாரமாக ஆணையம் வகைப்படுத்தியிருந்தது. தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குடியிருப்பு வட்டாரமாக அந்த இடம் மாறும். முதல் மாடியில் மட்டும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

1992 மே மாதம் திறக்கப்பட்ட அந்தக் கட்டடம் ஜீவி ஈசூன் என்றும் அழைக்கப்பட்டது. இது, ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டிசுக்குச் சொந்தமானது. இந்நிறுவனத்துக்கு நார்த்பாய்ண்ட் சிட்டி கட்டடமும் சொந்தமாக உள்ளது.

தங்களுக்குக் கிடைத்த முன்மொழிவுக்கு ஏற்ப புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

இந்நிலையில் தற்போதைய சொத்துகளை சாத்தியமுள்ள வழியில் பயன்படுத்துவது குறித்து ஆராய்வது எங்களுடைய வழக்கம் என்று ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“எங்களுடைய நிலப்பகுதிகளை சிறந்த வகையில் அதிக மதிப்புள்ள இடமாக மாற்றுவது அதன் நோக்கம்.” என்றார் அவர்.

தற்போதைய வாடகைதாரர்களின் குத்தகை எப்போது முடிவடையும் என்று கேட்டதற்கு ஈசூன் 10 வழக்கம்போல செயல்படும், புதிய மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

ஆஸ்திரேலிய கட்டட வடிவமைப்பாளரான ஜியோஃப் மலோன் வடிவமைப்பில் $37 மில்லியன் செலவில் கட்டப்பட்ட அந்தக் கட்டடம், நான்கு மாடிகளைக் கொண்டது. முதல் மாடியில் சில்லறைக் கடைகள் செயல்படுகின்றன. 1,477 இருக்கைகளைக் கொண்ட பத்து திரையரங்குகள் இங்கு உள்ளன. அடித்தளத்தில் கார்ப்பேட்டை உள்ளது.

இங்கு, ஆர்னால்ட்ஸ் ஃபிரைட் சிக்கன், ஸ்ரீ முருகன் சூப்பர்மார்க்கெட், கோமளாஸ் உணவகம் உள்ளிட்டவை தற்போது செயல்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்