ஈசூனில் உணவு விநியோக ஊழியர் மரணம்: ஆடவருக்குச் சிறை, வாகனமோட்டத் தடை

ஈசூனில் உணவு விநியோக ஊழியர் மரணம்: ஆடவருக்குச் சிறை, வாகனமோட்டத் தடை

படம்: பிக்சாபே

22 Nov 2026 - 8:47 pm

2 mins read

2023ஆம் ஆண்டில் உணவு விநியோக ஊழியர் ஒருவர் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த சாலை விபத்து தொடர்பில், 47 வயது ஆடவருக்குச் சிறைத் தண்டனையும் வாகனமோட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் கண்மூடித்தனமாக வாகனமோட்டி மரணம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஜியாங் பாவ்ஹுயி அண்மையில் ஒப்புக்கொண்டதாக ஷின்மின் நாளிதழ் சனிக்கிழமையன்று (நவம்பர் 21) செய்தி வெளியிட்டது.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்குப் பத்து ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

2023 ஜூன் 25ஆம் தேதியன்று, ஜியாங் தமது மகளைத் துணைப்பாட வகுப்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஈசூன் அவென்யூ 9 வழியாக ஈசூன் சென்ட்ரலை நோக்கித் தமது காரை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அவரது காரிலிருந்த ‘டேஷ்கேம்’ காணொளிப் பதிவில், அவர் சிவப்பு விளக்கை மீறி, நடையர் கடக்கும் பாதையில் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்றது பதிவாகியிருந்தது.

அப்போது மின்சார மிதிவண்டியில் சாலையைக் கடந்து கொண்டிருந்த டேவிட் சோங் எனும் உணவு விநியோக ஊழியர் மீது அவரது கார் மோதியது.

விபத்தின் வேகத்தில் 59 வயது திரு சோங் தூக்கி வீசப்பட்டுச் சாலையின் மறுபுறத்தில் விழுந்தார்.

காயமின்றித் தப்பிய ஜியாங், தமது காரிலிருந்து இறங்கிக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.

மயக்கமடைந்த நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு சோங், சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

விசாரணையின்படி, மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட அந்தச் சாலையில், ஜியாங் மணிக்கு 66 முதல் 75 கிலோமீட்டர் வரையிலான அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்