இரைச்சல் தொடர்பான தகராறு காரணமாக ஈசூன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது அண்டை வீட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 66 வயது ஆடவரைக் காவல்துறையினர், திங்கட்கிழமை (அக்டோபர் 6) சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
சிவப்பு போலோ சட்டை, கருநீலக் காற்சட்டை அணிந்திருந்த கோ அ ஹுவீ காலை 10 மணியளவில் ஈசூன் சென்ட்ரல் புளோக் 323க்குக் கறுப்பு வேனில் அழைத்துச்செல்லப்பட்டார்.
முகக்கவசம் அணிந்திருந்த கோவுடன் சாதாரண உடை அணிந்திருந்த காவல்துறை அதிகாரிகள் சென்றனர்.
காலை ஒன்பது மணியளவில் சீருடை அணிந்த காவல்துறையினர் மின்தூக்கித் தளம், உட்காரும் பகுதி ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் செல்லாவண்ணம் பொதுப் பகுதியில் ஒரு தடுப்பை அமைத்தனர்.
அந்த புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கோ, ஐந்தாவது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, சம்பவம் நடந்த ஆறாவது மாடிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மின்தூக்கித் தளத்திலும், நடைபாதைப் பகுதியிலும் விசாரணைகள் தொடர்ந்தன.
தொடர்புடைய செய்திகள்
காவல் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் தலையசைத்ததைக் காண முடிந்தது.
இரு தளங்களிலும் உள்ள நடைபாதைகளின் வெளிப் பகுதிகள் பிளாஸ்டிக் தாள்களால் மறைக்கப்பட்டிருந்தன. 11.30 மணியளவில் கோ அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, அந்தக் குடியிருப்பின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே உள்ள பொது நடைபாதையில் 30 வயதுத் திருவாட்டி நுவென் புவோங் டிராவின் மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வியட்நாமியப் பெண்ணின் கணவரையும் கோ கத்தியால் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 25ஆம் தேதி, கோ மீது குற்றம் சாட்டப்பட்டது. கோவிடம் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணை, அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.