தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நீங்கள் நிறுத்தாமல் பொய் பேசுபவர்’: ரயீசாவைச் சாடிய தற்காப்பு வழக்கறிஞர்

2 mins read
ae32999f-969b-46e2-98d5-fc7b7795f966
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நிறுத்தாமல் பொய் பேசுபவர் என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய் (இடது) சாடினார்.  - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கிற்குச் சாட்சியாக வந்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நிறுத்தாமல் பொய் பேசுபவர் என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய் சாடினார்.

திரு சிங், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இடம்பெறும் நீதிமன்ற விசாரணையின் இரண்டாவது நாளில் திரு ஜுமாபோய் அவ்வாறு கூறினார்.

தம் கதை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்னால் ஆதாரங்களுடன் சொல்லும்படி திரு சிங் கூறியது பற்றி திருவாட்டி ரயீசா வழங்கிய வாக்குமூலத்தைப் பற்றித் தற்காப்பு வழக்கறிஞர் ஜுமாபோய் கேள்வி கேட்டார்.

“நீங்கள் கூறியதற்கான விளக்கம் உங்களிடம் கேட்கப்படும் என எதிர்பார்க்கவில்லையா,” என திரு ஜுமாபோய், திருவாட்டி ரயீசாவிடம் கேள்வி கேட்டார்.

அத்துடன், ‘ஆதாரம் வழங்குவது’ என்ற தொடருக்கான பொருளை திரு சிங் தம்முடன் அமர்ந்து விளக்க வேண்டிய தேவை இருந்ததா எனக் கேள்வி கேட்ட திரு ஜுமாபோய்க்குப் பதிலளித்த திருவாட்டி ரயீசா அவ்வாறு சிங் செய்ய வேண்டியதில்லை என்று பதிலளித்தார்.

“நீங்கள் (நாடாளுமன்றத்திற்குச்) சென்று பொய் சொல்லப்போகிறீர்கள் என அவருக்குத் தெரியாது, இல்லையா?,” என்றார் திரு ஜுமாபோய்.

ஆதாரம் வழங்குவது என்ற தொடரைப் பற்றிய திருவாட்டி ரயீசாவின் புரிதல் என்ன எனக் கேட்ட பின்னர், அந்தத் தொடருக்கான பொருளை திருவாட்டி கான் புரிந்திருந்தும் புரியவில்லை என்று நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் தெரிவித்ததாகத் திரு ஜுமாபோய் கூறினார்.

“அப்படியென்றால் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் நீங்கள் கூறியது உண்மை இல்லை, அல்லவா?,” என்றார் திரு ஜுமாபோய்.

அதற்கு திருவாட்டி ரயீசா, “அது அந்த நேரத்தில் உண்மையாக இருந்தது,” என்றார்.

“நாள் முழுவதும் நான் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் பொய் சொல்பவர்தானே,” என்று திரு ஜுமாபோய் கேட்டதற்கு திருவாட்டி ரயீசா, “ஆம், நான் பொய் சொன்னேன்,” என்றார்.

“நீங்கள் நிறுத்தாமல் பொய் சொல்வீர்கள் இல்லையா,” என்று திரு ஜுமாபோய் கேட்டதற்கு, “இல்லை,” என்றார் திருவாட்டி ரயீசா.

ஒரு பொய்க்குமேல் பல பொய்களை திருவாட்டி ரயீசா அடுக்கடுக்காகச் சொன்னதாக திரு ஜுமாபோய் கூறினார்.

“ஒரே குறுஞ்செய்தியில் நீங்கள் கிட்டத்தட்ட நான்கு முறை பொய் சொன்னீர்கள்,” என்று கூறிய ஜுமாபோய், அது பாராட்டக்கூடியது எனக் கிண்டலாகக் கூறினார்.

அதற்கு, “பாராட்டக்கூடியது எனச் சொல்லமாட்டேன். அதனை பயம் என்று நான் சொல்வேன்,” என்றார் திருவாட்டி ரயீசா.

குறிப்புச் சொற்கள்