பாசிர் ரிஸ் குடியிருப்பாளர்களுக்கு ஈரச்சந்தை அனுபவத்தை வழங்கும் வகையில், இலாயஸ் மால் கடைத்தொகுதியில் புதிய 24 மணி நேர ஃபேர்பிரைஸ் பேரங்காடி திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி விற்பனையைத் தொடங்கிய இக்கடையை, பிரதமர் அலுவலக அமைச்சரும் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இந்திராணி ராஜா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கடையின் பாதியளவு இடவசதி மீன், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட புதிய உணவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மீன், கடலுணவு விற்பனைப் பகுதிகள் ஃபேர்பிரைஸ் கிளைகளிலேயே மிகப் பெரியவை.
ஈரச்சந்தையைப் போல மீன்களைச் சுத்தம் செய்து, நறுக்கி, ‘வேக்யும்’ முறையில் பொட்டலமிட்டுத் தரும் சேவைகளும் வழங்கப்படுகின்றன. காலை உச்ச நேரங்களில் பணியில் உள்ள சேவைத் தூதர்கள், வாடிக்கையாளர்களுக்குச் சமையல் குறிப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவர்.
முன்னர் ஈரச்சந்தையாக இருந்த இவ்விடத்தில், அதே அமைப்பைத் தக்கவைக்க வேண்டும் என்ற பாசிர் ரிஸ் குடியிருப்பாளர்களின் விருப்பத்தை அறிந்து அதைத் தாமும் பாசிர் ரிஸ் அடித்தளத் தலைவர்களும் ஃபேர்பிரைஸ் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியதாக அமைச்சர் இந்திராணி செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.
இதற்காக மக்களிடமிருந்து நேரடியாகவும் இணையவழியிலும் கருத்துகள் திரட்டப்பட்டதாக ஃபேர்பிரைஸ் சொன்னது.
வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ஹலால் பொருள்கள் பச்சை நிறச் சீட்டுகளுடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரங்காடியில் உள்ள யுனிட்டி மருந்தகத்தில் இலவச உடல் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள், பாரம்பரிய மூலிகை பொருள்கள் கிடைக்கின்றன.
இலாயஸ் மால் கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் செயல்படும் இப்புதிய பேரங்காடி, பாசிர் ரிசில் செயல்படும் இரண்டாவது 24 மணி நேரக் கிளையாகும். புதிய பேரங்காடியின் சிறப்பம்சங்களைக் குடியிருப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.
