தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$600 பெறுமானமுள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்

2 mins read
0ee3cc67-8130-4dc7-b1f4-a32e15a05f4c
தகுதி பெறும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் சிறப்பு வடிவமைப்பு கொண்ட எஸ்ஜி60 அஞ்சல் அட்டையைப் பெறுவர். ஏழு மாற்றுத்திறனாளி ஓவியர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த தனித்துவம் வாய்ந்த ஆறு ஓவியங்கள் அஞ்சல் அட்டைக்கு அழகு சேர்க்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை 22லிருந்து 21 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் தங்களுக்கான எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். பற்றுச்சீட்டின் மதிப்பு $600.

go.gov.sg/sg60v எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

23,000க்கும் மேற்பட்ட உணவங்காடிக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பேட்டை கடைகளில் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமன்றி, எட்டு பேரங்காடி நிறுவனங்களுக்குச் சொந்தமான ஏறத்தாழ 400 கிளைகளிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஜூலை 1லிருந்து 60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 915,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களுக்கான $800 பெறுமானமுள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள 1.1 மில்லியன் மூத்தோரில் இது 83 விழுக்காட்டுக்கும் அதிகம்.

இந்தப் புள்ளிவிவரங்களை வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 22) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளை மேலும் பல மூத்தோர் பெற்றுக்கொள்வது ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இதுவரை 127.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாகத் திருவாட்டி லோ கூறினார்.

உணவங்காடிக் கடைகளிலும் குடியிருப்புப் பேட்டை கடைகளிலும் கிட்டத்தட்ட $76.6 மில்லியன் பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேரங்காடிகளில் 51 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை ஏற்கும் கடைகளைக் கொண்ட பட்டியலைக் காண go.gov.sg/sg60voucher எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

தகுதி பெறும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் சிறப்பு வடிவமைப்பு கொண்ட எஸ்ஜி60 அஞ்சல் அட்டையைப் பெறுவர். ஏழு மாற்றுத்திறனாளி ஓவியர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த தனித்துவம் வாய்ந்த ஆறு ஓவியங்கள் அஞ்சல் அட்டைக்கு அழகு சேர்க்கும்.

அத்துடன், பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூரர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் புனைந்த செய்தியும் அவற்றில் இடம்பெற்றிருக்கும்.

குறிப்புச் சொற்கள்