தர்ஷினி - பிரகாஷ் இணையருக்கு இந்தத் தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.
மணமாகி ஏழு ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு பிறந்த பெண்குழந்தை, தம்பதியினரின் மனத்தில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்துள்ளார்.
ஜூலையில் பிறந்த காஷினியின் முதல் தீபாவளிக்காக அலங்காரங்கள், ஆடைகள் என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார் தாயார் பிரேம தர்ஷினி.
“முன்னர் தீபாவளியைப் பெற்றோர் வீட்டில் கொண்டாடுவோம். இந்த ஆண்டு காஷினியுடன் எங்கள் வீட்டிலேயே தீபாவளியைக் கொண்டாடுகிறோம்,” என்றார் சுயதொழில் செய்யும் பிரேம தர்ஷினி, 32.
“இரண்டு மாதக் குழந்தைக்குப் பால் மட்டும்தான் உட்கொள்ள முடியும். ஆனால் காஷினி, விழிப்புடன் சுற்றியுள்ளதைக் கவனிப்பதால் வண்ணமயமானச் சூழலை ஏற்படுத்த முற்பட்டுள்ளேன்,” என்றார் பிரேம தர்ஷினி.
குழந்தை வளர்ப்பில் சவால்கள் நிச்சயம் உண்டு. உளைச்சல்மிகு பகல்களும் உறக்கமில்லா இரவுகளும் பொருட்டல்ல என்றனர் தம்பதியினர்.
குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான தர்ஷினி, தமக்கு இளையவர்கள் இருவரை தம் பிள்ளைகளாகக் கருதி பராமரித்ததை நினைவுகூர்ந்தார்.
“என்றாலும், எனக்குப் பிறந்த குழந்தை எனும்போது அதனால் நான் உணரும் இன்பம் முற்றிலும் மாறுபட்டது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கணவராகவும் தந்தையாகவும் உள்ள இந்த இல்வாழ்க்கை, தம் கனவு வாழ்க்கை என்று போக்குவரத்து, தளவாட நிறுவனத்தை நடத்தி வரும் தந்தை ஜெயப்பிரகாஷ், 35, உளம்நெகிழ்ந்தார்.
“இந்தக் குழந்தைக்காக நாங்கள் ஆண்டுக்கணக்காகக் காத்திருந்தோம். எங்கள் உள்ளத்தில் இந்நாள்வரை தேங்கியிருந்த அன்பெல்லாம், குழந்தை மீது பொழிகிறோம்,” என்றார் ஜெயப்பிரகாஷ் ஜெயச்சந்திரன் பிள்ளை.
பிள்ளைப்பேற்றை ஆதரித்து அரசாங்கம் கடந்த ஆண்டு அறிவித்த கூடுதல் பிள்ளைப்பேற்று விடுப்பு, சிடிசி பற்றுச்சீட்டு உள்ளிட்ட சலுகைகள் தங்களைப் போன்ற இளம் குடும்பங்களுக்கு உபகாரமாக இருப்பதாக இந்தப் பெற்றோர் கூறினர்.
“நல்லவற்றை நினைத்து மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் வளர்த்துக்கொள்ள பண்டிகைகாலத்தைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.

